வாட்ஸ்அப், இ-மெயில், எக்ஸ் (ட்விட்டர்) என்று தொழில்நுட்பம் எவ்வளவுதான் அதிவேகமாக வளர்ந்தாலும், இன்றும் கிராமங்களின் உயிர்நாடியாக இருப்பது தபால் துறை தான். உலகை ஒற்றைப் புள்ளியில் இணைத்த பெருமைக்குரிய உலக அஞ்சல் தினம் இன்று (அக்டோபர் 9) கொண்டாடப்படுகிறது.
கடந்த 1874-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் 22 நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச அஞ்சல் சங்கத்தைத் தொடங்கின. இதனை நினைவுகூரும் வகையில், 1969-இல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த சர்வதேச அஞ்சல் சங்க மாநாட்டில் அக்டோபர் 9-ஆம் தேதி உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா இந்த சர்வதேச அஞ்சல் சங்கத்தில் 1876-ஆம் ஆண்டிலேயே இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அஞ்சல் துறைதான் உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 1.55 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் உள்ளன. இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை கிராமப்புறங்களில்தான் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 1774-ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் கொல்கத்தாவில் முதல் தபால் நிலையம் தொடங்கப்பட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 1712-ஆம் ஆண்டு கவர்னர் ஹாரிசன் காலத்தில் மெட்ராஸிலிருந்து மேற்கு வங்காளத்திற்கு தபால் கொண்டு செல்ல 'டார்க் ரன்னர்' எனப்படும் தபால் ஓட்டக்காரர்கள் மூலம் முதல் கம்பெனி தபால் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 1774-இல் தனியார் கடிதங்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து, 1785 மற்றும் 1786-ஆம் ஆண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் ஜான் பிலிப் பர்லடன் மற்றும் தாமஸ் லீவின் ஆகியோர் முறையான தபால் விதிகள் மற்றும் தபால் நிலையம் தேவை என்று மெட்ராஸ் கவர்னரிடம் ஆலோசனை கூறினர்.
கோட்டையில் தொடங்கிய சென்னை தபால் நிலையம்
இந்த ஆலோசனையை ஏற்று கவர்னர் ஆர்ச்சிபால்ட் கேம்ப்பெல், 1786-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி ஜார்ஜ் கோட்டையில் உள்ள கடற்கரை நுழைவாயிலுக்கு வெளியே முதல் மெட்ராஸ் தபால் நிலையத்தைத் தொடங்கினார். இது 1837-இல் கோட்டைக்குள் வடக்கு நுழைவாயில் அருகேயும், பின்னர் 1856-இல் பிராட்வேயில் உள்ள தோட்டத்து மாளிகைக்கும் மாற்றப்பட்டது. சென்னையில் முதல் தபால் பெட்டி மௌப்ரீஸ் சாலையில் (இன்றைய டி.டி.கே சாலை) வைக்கப்பட்டது.
இந்த நன்னாளில் உங்கள் நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ ஒரு கடிதம் எழுதி மகிழுங்கள்!