சிறப்புக் கட்டுரைகள்

அரிதாக கிடைக்கும் முந்திரி பழம்... அள்ளித்தரும் ஆரோக்கிய நன்மைகள்!

முந்திரிப் பருப்பைப் போலவே முந்திரி பழத்திலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

பொதுவாக முந்திரி பருப்பை விரும்பி சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். ஆனால், முந்திரி பழத்தை சாப்பிடுபவர்கள் குறைவு. மேலும், இந்தப் பழம் எளிதில் கிடைக்காததால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

முந்திரி பருப்பைப் போலவே முந்திரி பழத்திலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம், இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. சுவையுடன் உடலுக்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கும் முந்திரி பழத்தின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்!

முந்திரி பழத்தில் உள்ள புரோஅந்தோசயனின் என்ற சேர்மம், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இதில் உள்ள தாமிரச்சத்து செல்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதில் முந்திரி பழம் பங்களிக்கக்கூடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

முந்திரி பழத்தில் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்!

முந்திரி பழத்தில் உள்ள லூட்டின் சத்து கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. மேலும், சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கவும் துணைபுரிகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு உதவும்!

முந்திரி பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களை வழங்க உதவுகின்றன. இவை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தின் சீரான செயல்பாட்டுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களாக உள்ளன. எனவே, அளவோடு முந்திரி பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.

சருமப் பொலிவை அதிகரிக்கும்!

முந்திரி பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி, சருமத்துக்குத் தேவையான கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், இதில் உள்ள தாமிரச்சத்து சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரித்து, இயற்கையான பொலிவைப் பெற உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவலாம். இருப்பினும், எந்த உணவையும் அளவோடு எடுத்துக்கொள்வதே சிறந்தது.

SCROLL FOR NEXT