ஸ்டாயிக் தத்துவம் (Stoicism) என்பது பண்டைய கிரேக்க நாட்டில் தோன்றிய ஒரு வாழ்வியல் சிந்தனையாகும். புகழ்பெற்ற கிரேக்க அறிஞர்களும், மன்னர்களும் இந்த தத்துவத்தை பின்பற்றி வாழ்ந்துள்ளனர். குறிப்பாக செனெகா (Seneca), எபிக்டெட்டஸ் (Epictetus) போன்ற தத்துவ ஞானிகளும், மார்க்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius) போன்ற பேரரசர்களும் ஸ்டாயிக் தத்துவத்தை ஆழமாக பின்பற்றியுள்ளனர்.
ஸ்டாயிக் தத்துவம், ‘வாழ்வில் வரும் துன்பங்களை ஒரு மனிதன் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?’ என்ற அடிப்படை கேள்விக்கு பதிலளிக்கிறது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்பதை புரிந்து, ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, நமது கட்டுப்பாட்டில் உள்ள செயல்களை அறம், நீதி மற்றும் சமூக நலன் சார்ந்து செயல்படுத்த வேண்டும் எனவும் ஸ்டாயிக் தத்துவம் கூறுகிறது.
ஸ்டாயிக் தத்துவத்தை பின்பற்றி வாழ்ந்தவர்களில் மிகவும் முக்கியமானவர், ரோமானியப் பேரரசர் மார்க்கஸ் அரேலியஸ். இவர் கி.பி. 121-ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் ஆன்னியஸ் வெரஸ். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த மார்க்கஸ் அரேலியஸ், அவரது தாத்தாவால் தத்தெடுக்கப்பட்டார். தனது தாத்தாவிடம் இருந்து பல்வேறு உயர்குணங்களை கற்றுக்கொண்டதாக பின்னாட்களில் மார்க்கஸ் அரேலியஸ் கூறியுள்ளார்.
மார்க்கஸின் அத்தை ஆன்னியா பாஸ்டினா, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆண்டோனியஸ் பயஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆண்டோனியஸ் பயஸ் பின்னாட்களில் ரோமாபுரியின் அரசர் ஆனார். ஆனால் அவர் வாரிசு இல்லாமல் இறந்துவிடவே, அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்த மார்க்கஸ் அரேலியஸ் தனது 40-வது வயதில் ரோமானியப் பேரரசராக பதவியேற்றார்.
தனது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு படையெடுப்புகளையும், மக்களை தாக்கிய கொள்ளை நோய்களையும் மார்க்கஸ் அரேலியஸ் திறம்பட எதிர்கொண்டார். அதே சமயம், அரச வாழ்க்கையில் கிடைக்கும் சுக, போகங்களில் திளைத்துவிடாமல், மிகவும் எளிமையான வாழ்க்கையை இவர் வாழ்ந்துள்ளார். தத்துவ சிந்தனைகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
இவர் எழுதிய ‘தியானங்கள்’(Meditations) என்ற புத்தகம் உலகப் புகழ் பெற்றது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், மார்க்கஸ் அரேலியஸ் இதனை ஒரு புத்தகமாக எழுதவில்லை. மாறாக, தனது சொந்த பயன்பாட்டிற்காக, ‘ஸ்டாயிக்’ தத்துவத்தின் அடிப்படையில், ஒரு டைரி போல் பல குறிப்புகளை அவர் எழுதி வைத்துள்ளார். இந்த குறிப்புகள் பிற்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டு, புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
ரோமாபுரியின் 5 நல்ல அரசர்களில் ஒருவர் என பெயர் வாங்கும் அளவிற்கு மிகச்சிறப்பான ஆட்சியை நடத்தியவர் மார்க்கஸ் அரேலியஸ். தத்துவத்தை பேசுபவராக மட்டும் இல்லாமல், அதை தனது வாழ்வில் பின்பற்றி, வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்பதால், அவரது ‘தியானங்கள்’ புத்தகம் இன்றைய காலகட்டத்திலும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு புத்தகமாக திகழ்கிறது.
மார்க்கஸ் அரேலியஸின் ‘தியானங்கள்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில வாழ்வியல் சிந்தனைகள்:
உலக இயற்கையின்படி, தாங்க முடியாத துன்பம் எதன் மீதும் சுமத்தப்படாது. துன்பத்தை விட, துன்பத்தை பற்றிய கருத்துதான் உன்னை வருத்தமடையச் செய்கிறது. துன்பத்தில் இருந்து விடுபட உன்னால் ஏதேனும் செய்ய முடியும் என்றால், அதை செய்துவிடு. உனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சக்தியால் உனக்கு துன்பம் ஏற்படும்பட்சத்தில், உன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று நினைத்து நீ வருந்துவதில் அர்த்தமில்லை.(8:45)
தாங்க முடியாத வலி(அல்லது துன்பம்), மரணத்தால் முடிவு பெற்றுவிடும். அதே சமயம், ஒரு வலி(அல்லது துன்பம்) மரணத்தை ஏற்படுத்தவில்லை என்றால், உன்னால் நிச்சயம் அதனை தாங்கிக் கொள்ள முடியும்.(7.22)
உனது மரணம் வரும்வரை உன்னுடைய மனதை திருப்தி அடையச் செய்வது எது? இறை நம்பிக்கையும், பிற மனிதர்களுக்கு நீ செய்யக் கூடிய நன்மைகளும் மட்டும்தான்.(5:27)
மற்றவர்களின் எண்ணங்களை கவனிக்காத மனிதம் துயரம் அடைவது அரிது.(தியானங்கள் 2:5)
உனக்கு சொந்தமான, உன் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் நீ உனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். உன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத அனைத்தும் உனக்கு நன்மையாகவே அமையும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.(3:4)
தற்சமயம் உனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத எதையும் நீ பொருட்படுத்த தேவையில்லை. அது மட்டுமின்றி, உனது கடந்த கால மற்றும் எதிர்கால செயல்களையும் நீ பொருட்படுத்த தேவையில்லை. நிகழ்காலத்தில் உனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட செயல்களில் மட்டுமே நீ கவனம் செலுத்த வேண்டும்.(6:30)
உலகில் நீ இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்தும் விரைவில் மாறிவிடும், இல்லாமலும் போய்விடும். உனது வாழ்நாளிலேயே நீ இதுவரை எத்தனை மாற்றங்களை பார்த்துவிட்டாய் என்பதை எண்ணிப்பார். இந்த உலகம் என்பது வெறும் மாற்றம்; இந்த வாழ்க்கை என்பது வெறும் கருத்து.(4:3)
இந்த உலகம் ஒரு பெருவெள்ளத்தைப் போன்றது. தற்போது நாம் காணும் அனைத்தும் கால வெள்ளத்தில் அடித்து வரப்பட்டவை. எதுவுமே நிலைத்து இருப்பதில்லை.(4:35)
மனித வாழ்க்கை மிகச்சிறியது. மனநிறைவுடன் இவ்வுலகை விட்டு விடைபெற்றுச் செல்ல தயாராக இருக்க வேண்டும்.(4:39)
புகழ்பவனும், புகழப்படுபவனும், நினைப்பவனும், நினைக்கப்படுபவனும் விரைவில் மறைந்து தூசியாகவும், சாம்பலாகவும் மாறிப்போவார்கள்.(8:19)
அதிகாலையில் எழுந்து உனது பணிகளை செய்வதற்கு தயக்கம் ஏன்? கதகதப்பான மெத்தையில் படுத்து உறங்குவதற்காகவா இந்த உடல் படைக்கப்பட்டுள்ளது? செடிகளும், மரங்களும், தேனீக்களும், பறவைகளும், விலங்கினங்களும் இயற்கையின் விதிகளை பின்பற்றி செயல்படுவதைப் பார். உனது இயற்கை குணத்திற்கு ஏற்ற செயல்களைச் செய்ய நீ எழுந்து ஓட வேண்டாமா? (5:1)
உனது இயற்கையான குணத்திற்கு ஏற்ப ஒரு கருத்தை சொல்வதோ, அல்லது ஒரு செயலை செய்வதோ சரி என்று தோன்றினால் அதில் இருந்து பின்வாங்க வேண்டாம். (5:3)
நீ எங்கு வாழ்ந்தாலும் சரி, மகிழ்ச்சியாகவும், நன்றாகவும் வாழ்வது உனது கட்டுப்பாட்டில் இருக்கிறது. உனது இயற்கை குணம் எதை நோக்கி உன்னை செலுத்துகிறதோ, அதில்தான் உனது லட்சியம் அடங்கியிருக்கிறது.(5:15)
உன்னிடம் சொல்லப்படும் தகவல்களில் இருக்கும் உண்மையை புரிந்து ஏற்றுக்கொள். உன்னைப் பற்றி பிறர் அவதூறு பேசுகின்றனர் என்று உன்னிடம் சொல்லப்படுகிறது. அந்த அவதூறுகளால் நீ வருத்தப்பட வேண்டும் என்று உன்னிடம் சொல்லப்பட்டதா? அவதூறுகளால் ஒருவன் வருத்தப்பட வேண்டும் என்பது வெறும் கருத்து மட்டுமே. எனவே, அதை நீ கண்டுகொள்ளத் தேவையில்லை.(8:47)
வெளித்தோற்றத்தால் ஏற்படும் கவர்ச்சியில் இருந்து கவனமாக விலகி இரு. அப்போதுதான் உன்னால் விஷயங்களை சரியாகப் பகுத்தறிய முடியும்.(3:4)
தேவையில்லாத செயல்கள் மட்டுமல்ல, தேவையில்லாத சிந்தனைகளையும் நீ தவிர்க்க வேண்டும். அதன் மூலம் தேவையில்லாத செயல்கள் தானாக தவிர்க்கப்பட்டுவிடும். (4:20)
சமூகத்திற்கு நன்மை தராத ஒரு செயலைச் செய்ய வேண்டாம். அதிகம் பேசுபவனாகவோ அல்லது அளவுக்கு அதிகமான பொறுப்புகளை தன்மீது சுமத்திக்கொள்பவனாகவோ இருக்க வேண்டாம். உனக்குள் இருக்கும் கடவுள் உன்னை ஆட்சி செய்யட்டும்.(3:4)