சிறப்புக் கட்டுரைகள்

18 வயது பெண் விளையாட்டாக எழுதிய கதை... உலகின் முதல் சயின்ஸ் பிக்‌ஷன் நாவலாக மாறிய வரலாறு

நாவலின் கருப்பொருள் மேரியின் கனவில் வந்த ஒரு காட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜெனீவா,

புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் பெரும்பாலும் பிக்‌ஷன்(Fiction) எனப்படும் புனைவு கதை நாவல்களை அதிகமாக விரும்பி படிக்கின்றனர். உதாரணமாக ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர்’(Harry Potter) வரிசை புத்தகங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்ததோடு, திரைப்படங்களாகவும் வெளியாகி சக்கைப் போடு போட்டது.

ஆனால் அந்த கதையோ உண்மைக்கு சற்றும் நெருக்கம் இல்லாத, மாயாஜால உலகத்தில் நிகழக்கூடியது. இருப்பினும் ‘ஹாரி பாட்டர்’ கதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இதே போல் ஹெச்.ஜி.வெல்ஸ், ஸ்டீபன் கிங், பிராங்க் ஹெர்பர்ட், டோல்கியன் உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பலர் பிக்‌ஷன் கதைகளை எழுதி ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

இது போன்ற புனைவு கதைகள் நமது அன்றாட வாழ்வின் போராட்டங்களில் இருந்து நம்மை சற்று நேரம் விலக்கி வேறொரு உலகத்திற்கு கொண்டு சென்றுவிடுவதால், இத்தகைய புத்தகங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. இதில் குறிப்பாக, புனைவு கதைகளில் சற்று நிஜத்தை கலந்து எழுதும்போது அதன் சுவாரஸ்யம் மேலும் அதிகரிக்கிறது.

சயின்ஸ் பிக்‌ஷன்

அந்த வகையில், புனைவு கதைகளில் அறிவியலை கலந்து எழுதுவது சயின்ஸ் பிக்‌ஷன்(Science Fiction) என்று அழைக்கப்படுகிறது. ஹாலிவுட்டில் இதுபோன்ற பல்வேறு சயின்ஸ் பிக்‌ஷன் நாவல்கள் பிரம்மாண்டமான தயாரிப்பில் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. உதாரணமாக Jurassic Park’(மைக்கெல் கிரிச்டன்), Dune(பிராங்க் ஹெர்பர்ட்), ‘Project Hail Mary’(ஆன்டி வெய்ர்) போன்ற சயின்ஸ் பிக்‌ஷன் நாவல்கள் உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களாக மாறியுள்ளன.

பிராங்கென்ஸ்டைன்

அந்த வகையில், உலகின் முதல் சயின்ஸ் பிக்‌ஷன் நாவல் என்ற பெருமையை ‘பிராங்கென்ஸ்டைன்’(Frankenstein) என்ற நாவல் பெற்றுள்ளது. புகழ்பெற்ற ஆங்கில பெண் எழுத்தாளர் மேரி ஷெல்லி இதனை எழுதியுள்ளார். 1816-ம் ஆண்டில் இதை எழுத ஆரம்பித்து 1817-ல் நாவலை நிறைவு செய்தார். இந்த நாவலை எழுத ஆரம்பித்தபோது மேரி ஷெல்லியின் வயது 18.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த கதையை அறிவியல் புனைவு கதையாக அவர் எழுதவில்லை. ஒரு பேய் கதை எழுத வேண்டும் என்று நினைத்துதான் இந்த புத்தகத்தை அவர் எழுத ஆரம்பித்துள்ளார். அதுவும், யார் சிறந்த பேய் கதை எழுதுகிறார்கள் என்று பார்க்கலாம் என தனது நண்பர்களுடன் பந்தயம் கட்டி அவர் இந்த நாவலை எழுதியுள்ளார்.

மேரி ஷெல்லி

1797-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ந்தேதி லண்டன் நகரில் பிறந்த மேரி, 1816-ம் ஆண்டு பெர்சி ஷெல்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். அந்த சுற்றுலாவின்போது அவர் கண்ட அழகிய நகரங்கள், பனி மலைகள், பிரம்மாண்ட ஏரிகள், அடர்ந்த காடுகள் ஆகிய அனைத்தும் ‘பிராங்கென்ஸ்டைன்’ நாவலுக்கான ஊக்கமாக அமைந்தன.

பேய் கதை போட்டி

1817-ம் ஆண்டு மேரி ஷெல்லியும், அவரது கணவர் பெர்சி ஷெல்லியும் ஜெனிவாவில் தங்கியிருந்தபோது, அவர்களது நண்பர்களான புகழ்பெற்ற ஆங்கில கவிஞர் பைரன், அவரது மருத்துவர் ஜான் பிலோடோரி ஆகியோர் ஒரு பேய் கதை எழுதுவது பற்றி பேச ஆரம்பித்தனர். அப்போது கவிஞர் பைரன், ‘நம்மில் யார் மிகச்சிறந்த பேய் கதையை எழுதுகிறார் என்று ஒரு பந்தயம் வைத்துக் கொள்ளலாம்’ என்றார்.

இதனை ஏற்று ஆளாளுக்கு ஒரு கதையை எழுத ஆரம்பித்தனர். மற்றவர்கள் சிறுகதைகளை எழுதிவிட்டு, பின்னர் அதை அத்துடன் விட்டுவிட்டனர். ஆனால் மேரி ஷெல்லி, இதில் தீவிரமாக இறங்கி ஒரு முழு நாவலை எழுதி முடித்துவிட்டார். அந்த நாவலே உலகின் முதல் சயின்ஸ் பிக்‌ஷன் நாவலாக உருவெடுத்துவிட்டது.

கனவில் வந்த கருப்பொருள்

இந்த நாவலின் கருப்பொருள் மேரியின் கனவில் வந்த ஒரு காட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கதையின்படி, அறிவியல் மாணவர் ஒருவர் மனிதனைப் போன்ற ஒரு உயிரினத்தை ஆய்வகத்தில் உருவாக்க விரும்பி அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். ஆனால் அவ்வாறு உருவாக்கப்பட்ட உருவத்திற்கு உயிர் வந்தபோது, அதை உருவாக்கியவரே அதை வெறுத்து ஒதுக்கி விடுகிறார். அசுர பலம் கொண்ட, கோரமான உருவத்தைக் கொண்ட அந்த உருவம், தன்னை உருவாக்கியவரை என்ன செய்தது என்பதே மீதி கதை.

ஆழ்ந்த சிந்தனைகள்

19-ம் நூற்றாண்டில் இருந்த அறிவியல் வளர்ச்சி, அறிவியலுக்கும், மாந்திரீகத்திற்கும் இடையே நிலவிய குழப்பங்கள், மனித உயிரின் மகத்துவம், படைப்பின் ரகசியம் பற்றிய கேள்விகள் என ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்ட நாவலாக இது அமைந்துள்ளது. 18 வயதில் மேரி ஷெல்லி எழுதிய இந்த நாவல், இன்று வரை வாசகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

திரைப்படங்கள்

இந்த நாவலை அடிப்படையாக கொண்டு ஏராளமான திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு கூட இதை வைத்து ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுக்கப்பட்டது. மேரி ஷெல்லிக்கு முன்பே அறிவியல் கருத்துகளை கொண்ட சில நாவல்கள் வந்திருந்தாலும், நவீன அறிவியல்(Modern Science) அடிப்படையில் எழுதப்பட்ட உலகின் முதல் சயின்ஸ் பிக்‌ஷன் நாவலாக ‘பிராங்கென்ஸ்டைன்’ திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“பிற துறைகளில், உங்களுக்கு முன்னால் சென்றவர்கள் எட்டிய எல்லை வரை மட்டுமே உங்களால் செல்ல முடியும்; அதற்கு மேல் அறிந்துகொள்ள எதுவும் இருக்காது. ஆனால், அறிவியல் தேடலிலோ புதிய கண்டுபிடிப்புகளும், வியக்கத்தக்க விஷயங்களும் இடைவிடாத வெள்ளமெனப் பெருகிக்கொண்டே இருக்கின்றன.”
மேரி ஷெல்லி(பிராங்கென்ஸ்டைன்)