ஒரு காலத்தில் ஊரில் ஒரு வீட்டில் மட்டும் டிவி இருக்கும், மாலை 6 மணி ஆனால் போதும், தெருவே அந்த வீட்டு வாசலில் கூடிவிடும். செய்தி பார்க்கவும், சினிமா பார்க்கவும் மக்கள் கூட்டம் கூடும். இன்று ஒவ்வொரு வீட்டிலும் டிவி இருக்கிறது, அந்த தொலைக்காட்சிக்கு ஒரு நாள் இருக்கிறது தெரியுமா? அது தான் நவம்பர் 21-ம் தேதி உலக தொலைக்காட்சி தினம், இந்த ஆண்டு அது சனிக்கிழமை வருகிறது.
1996-ம் ஆண்டு நவம்பர் 21, 22-ம் தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபை முதல் உலக தொலைக்காட்சி மாநாட்டை நடத்தியது. அதில் உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி நிபுணர்கள் கலந்து கொண்டனர். தொலைக்காட்சி வெறும் பொழுதுபோக்கு சாதனம் இல்லை, அது அமைதி, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, சமூக மாற்றம் ஆகியவற்றுக்கு எப்படி உதவுகிறது என்று அந்த மாநாட்டில் பேசப்பட்டது. அதன் பிறகு ஐ.நா, சபை நவம்பர் 21-ம் தேதியை உலக தொலைக்காட்சி தினம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1926-ம் ஆண்டு ஜான் லோகி பெயர்ட் என்ற ஸ்காட்லாந்து விஞ்ஞானி முதல் தொலைக்காட்சியை கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் கருப்பு வெள்ளை டிவி மட்டுமே இருந்தது. பிறகு, 1928-லேயே ஜான் லோகி பெயர்ட் வண்ண தொலைக்காட்சி (Color TV) சோதனையையும் நிகழ்த்தினார். அதன்பின் தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்.சி.டி (LCD), எல்.இ.டி (LED), ஸ்மார்ட் டிவி என வளர்ந்துவிட்டது. இந்தியாவில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தான் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு டெல்லியில் தொடங்கியது.
1959-ம் ஆண்டு டெல்லியில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டபோது, வாரத்திற்கு 2 நாட்கள் (செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்) தலா 1 மணி நேரம் மட்டுமே கல்வி மற்றும் சமூக வளர்ச்சித் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. 1976-ம் ஆண்டு தூர்தர்ஷன் என்ற பெயரில் தனி அமைப்பு உருவானது. 1982-ம் ஆண்டு தான் இந்தியாவில் கலர் டிவி வந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிதான் முதல் கலர் ஒளிபரப்பு. 1980-களில் ராமாயணம், மகாபாரதம் சீரியல்கள் வந்த போது தெருவே காலியாகிவிடும். அந்த அளவுக்கு டிவி மக்களை கட்டிப்போட்டது.
சென்னை தூர்தர்ஷன் தொடக்கம் (1975). தமிழ்நாட்டில் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை தொலைக்காட்சி நிலையம் (தூர்தர்ஷன்) தொடங்கப்பட்டு, ஆரம்பத்தில் அது மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது.
1970-களின் பிற்பகுதியிலிருந்து 1990-களின் முற்பகுதி வரை வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒளியும் ஒலியும்’ திரைப்படப் பாடல்கள் தொகுப்பு, தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தது.
1993-ம் ஆண்டு தான் தமிழ்நாட்டில் தனியார் சேனல் வந்தது. அதன் பிறகு மற்ற தனியார் சேனல்கள் வந்தன. டிவி வந்த போது பலர் இது வெறும் பொழுதுபோக்கு பெட்டி என்று நினைத்தார்கள். ஆனால், இன்று டிவி இல்லாத வீடே இல்லை.
செய்தியை உடனுக்குடன் கொடுத்து, கல்வியை கிராமம் வரை கொண்டு சென்றது. விவசாயிக்கு வானிலையை சொல்லி, நோயாளிக்கு விழிப்புணர்வை கொடுத்து, ஒரு குடும்பத்தையே ஒன்றாக உட்கார வைத்த பெருமை தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு. செல்போனில் எத்தனை வசதிகள் வந்தாலும் டிவியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. ஏனென்றால், டிவி என்பது தனியாகப் பார்க்கும் சாதனம் இல்லை, குடும்பமாக பார்க்கும் சாதனம் ஆகும்.
இந்த உலக தொலைக்காட்சி தினத்தில் நம்மை உலகத்தோடு இணைத்த அந்தப் பெட்டிக்கு நன்றி சொல்வோம். நல்லதை பார்ப்போம், நல்லதை கற்றுக்கொள்வோம்.