2020-ம் ஆண்டு டெல்லியில் நடை பெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் ஹெச்.பி.எக்ஸ். என்ற கான்செப்ட் காரை காட்சிப்படுத்தி இருந்தது. கண்காட்சியில் பெருமளவிலான பார்வையாளர் களைக் கவர்ந்த காராகவும் இது திகழ்ந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வெகு விரைவாகப் பரவியதைத் தொடர்ந்து இந்த கான்செப்ட் காரை அறிமுகப்படுத்துவதை இந் நிறுவனம் தள்ளிப்போட்டு வந்தது. தற்போது இதற்கு பஞ்ச் என பெயர் சூட்டியதோடு, அறிமுகம் செய்வதற்கான உற்பத்தி பணிகளையும் இந்நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆல்பா-ஆர்க் என்ற புதிய நுட்பம் இந்தக் கார் தயாரிப்பில் பின்பற்றப்பட்டுள்ளது. யுடிலிடி மற்றும் ஸ்போர்டிங் உள்ளிட்ட இரண்டு பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சாலைகளில் இயக்கும் வகையிலான வடிவமைப்பு, அதேசமயம் சாகசப் பயணத்துக் கேற்ற வகையிலான ஸ்திரமான கட்டமைப்பை கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல உள்புறம் போதிய இடவசதி கொண்டதாக உள்ளது. அத்துடன் ஓட்டுவதற்கு ஏற்ற வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களோடு மிகச் சிறப்பான செயல்பாடு கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறத்துக்கேற்ற அழகிய தோற்றம், உறுதியான கட்டமைப்பு, சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டதாக இது விரைவில் சந்தைக்கு வர உள்ளது.