சிறப்புக் கட்டுரைகள்

மகன் சஞ்சய்யின் “சிக்மா” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் விஜய்?

மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் ‘சிக்மா’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் முதல்-அமைசர் விஜய் பங்கேற்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி ‘சிக்மா’ வெளியாகவுள்ளது.

‘சிக்மா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18 ஆம் தேதி நடைபெறலாம் என்று தெரிகிறது. இன்னும் இந்த தேதி உறுதி செய்யப்படாவிட்டாலும், தன்னுடைய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தந்தை விஜய்யை ஜேசன் சஞ்சய் அழைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சஞ்சயின் தாயார் சங்கீதா இந்த இசை வெளியீட்டு விழாவில் நிச்சயம் பங்கேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தனது முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்குத் தந்தை விஜய், தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாட்டி ஷோபா ஆகிய ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அழைக்க ஜேசன் சஞ்சய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாவிட்டாலும், சஞ்சயின் தந்தை என்ற முறையில் முதல்-அமைச்சர் விஜய் இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து வேறுபாடு காரணமாக விஜய் - சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கும் போதிலும், பிள்ளைகளின் முக்கிய தருணங்களில் பெற்றோராக இருவரும் நிற்பார்கள், நிற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

‘சிக்மா’ திரைப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியானது. சிக்மா ஸ்டைல் பாடலில், ஜேசன் சஞ்சய்யும் நடனமாடியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு் கொண்டாட்டத்தை அளித்துள்ளது என்றே சொல்லலாம். விஜய் ரசிகர்கள், விஜய்யின் கலைவாரிசாக ஜேசன் சஞ்சய்யை கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.

பல்வேறு சம்பவங்களிலும், இதுபோல விவாகரத்து பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு முக்கியமான தருணங்களில் ஒன்றாக பங்கேற்பதைப் பார்த்திருக்கிறோம். இதுபோல முதல்வர் விஜய்யும் மகனின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று தவெக தொண்டர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். குடும்ப சச்சரவுகளை மறந்து விஜய் - சங்கீதா ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா என்பதே தவெக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.