சிறுவர் பூங்காக்கள், நீர் விளையாட்டுகள் நிறைந்த தீம் பார்க்குகள், தேசியப் பூங்காக்கள் பற்றி கேள்விப்பட்டிருப் போம். நேரில் சென்று பார்த்திருப்போம். ஆனால் கல்மரப் பூங்கா பற்றி அறிந்துகொள்ளவும். அதனை பார்வையிடவும் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. இத்தகைய பூங்காக்களும் அரிதாக ஆங்காங்கே அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அது பற்றி விரிவாக காண்போம்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் திருவக்கரை கிராமத்தின் கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில் தேசிய கல்மரப்பூங்கா அமைந்துள்ளது. இது ஒரு புவியியல் பூங்காவாகும். இந்திய புவியியல் ஆய்வுத்துறையினால் பராமரிக்கப்படுகிறது.
ஐரோப்பாவைச் சேர்ந்த இயற்கைவியலாளர் சொன்னேர்ட் என்பவரால்தான் முதலில் இவ்விடத்தில் கல் மரங்கள் இருப்பு குறித்து 1781-ம் ஆண்டில் ஆவணம் செய்யப்பட்டது. இந்த பூங்காவில் மணற்பாறைகளுக்கு இடையே மரங்கள் கல்லாகிப் போனதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. இங்கிருக்கும் கல்மரங்கள் சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
இப்பகுதியில் இருந்த காடுகளில் இருந்து ஆற்று வெள்ளத்தினால் அடித்து கொண்டு வரப் பட்ட மரங்கள் மணலோடு, கூழாங்கற்களோடு சேர்ந்து இங்கிருந்த நீர்நிலைகளில் படிந்தன. காலப்போக்கில் மென்மேலும் மணற்படிவங்கள் அடுக்கடுக்காக படிந்ததால் ஏற்பட்ட வெப்ப அழுத்த மாற்றங்களால் இவை மரத்தின் தன்மையை இழந்து சிலிக்காவை எடுத்துக்கொண்டு கல் மரங்களாக மாறியுள்ளன. ஆயினும் கல் மரங்களில் கால வளையங்கள். கணுக்கள் போன்றவை மரத்தின் தோற்றம் மாறாமல் அப்படியே காணப்படுகின்றன.
இங்கு 200-க்கும் மேற்பட்ட கல் மரங்கள் 247 ஏக்கர் பரப்பளவில் உள்ளன. மரங்கள் அனைத்தும் 3 முதல் 15 மீட்டர் நீளமும், 5 மீட்டர் சுற்றளவும் கொண்டதாகும். இங்கிருக்கும் கல் மரங்கள் பலவும் படுக்கை நிலையில் உள்ளதை ஒரு சான்றாக கருதலாம்.
இந்த மரங்களில் பட்டையோ, கிளைகளோ, வேர்களோ காணப்படாததால், இம்மரங்கள் கல் லாக மாறும் முன்பே இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. சங்கராபரணி ஆறு அருகில் இருப்பதால், சாதாரண அடி மரங்களாக இருந்தவை. காலப் போக்கில் சிலிக்கா என்னும் மணற்பொருள் கலந்து கல் மரங்களாக மாறியிருக்கக் கூடும் என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகில் உள்ள சில தொல்லியல் பூங்காவில் மட்டுமே இங்கிருக்கும் படிமங்கள் போல் பாது காப்பாக இருக்கும். அதற்கும் காரணம் இங்கிருந்த சிலிக்கா மீது எரிமலை சாம்பல் படிந்து இருக்க வேண்டும். இங்கு இருக்கும் மர படிமங்களை கடலூர் மணற் கற்பாறை என்று கூறுகிறார்கள்.
இந்த கல்மரங்களில் சில, திறந்த விதை தாவர இனத்தையும், சில மூடிய விதை தாவர இனத்தையும் சேர்ந்தவை. இக்காலத்தில் உள்ள புன்னை, கட்டாஞ்சி, ஆமணக்கு குடும்பங்களை சேர்ந்த மரங்களும், புளிய மரத்தையொத்த மரங்களும் இங்கு கல் மரங்களாக காட்சி தருகின்றன. உலகின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் இந்த அரிய வகை கல் மரங்கள் பூமியின் வரலாற்றை உரைக்கும் வரலாற்று சான்றுகளாகும்.
இவ்வகை கல்மரங்கள் மிகவும் கவனமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டியனவாகும். நாட் டின் பல்வேறு இடங்களில் உள்ள அரிய வகை தேசிய புவியியல் நினைவு சின்னங்களை பராமரித்து வரும் இந்திய புவியியல் ஆய்வுத்துறை, 1957-ம் ஆண்டில் இருந்து இந்த கல்மரங்களை போற்றி பாதுகாத்து வருகிறது.
இந்த கல்மர பூங்காவில் 300 ஆண்டுகள் பழமையான மரங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை புரிந்து இந்த சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமாக விளங்கும் கல்மரப் பூங்காவை பார்த்து செல்கின்றனர்.