சிறப்புக் கட்டுரைகள்

அது என்ன அனைத்து ஏவுகணைகளின் தந்தை... அமெரிக்காவை மிரட்டும் ஈரானின் பின்னணி என்ன?

அமெரிக்கா அனைத்து ஏவுகணைகளின் தாயை பயன்படுத்த விரும்பினால், நாங்கள் அனைத்து ஏவுகணைகளின் தந்தையை கொண்டு தாக்குவோம் என்றார்.

தெஹ்ரான்

அமெரிக்காவை அனைத்து ஏவுகணைகளின் தந்தையை கொண்டு தாக்குவோம் என்று மிரட்டும் ஈரானின் பின்னணி பற்றி பார்ப்போம்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, அனைத்து ஏவுகணைகளின் தாய் எங்களிடம் உள்ளன. அதனை கொண்டு ஈரானை முடித்து விடுவோம் என மிரட்டல் விடும் வகையில் பேசினார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் முடிவுக்கு வராத நிலையில் டிரம்ப்பின் இந்த பேச்சு ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.

அதற்கு பதிலாக, ஈரானின் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை குழுவின் உறுப்பினரான அலாவுதீன் பராவ்ஜெர்தி அமெரிக்காவுக்கு பதிலடியாக மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

அமெரிக்க ராணுவ பலம்

அவர் கூறும்போது, அமெரிக்கா அனைத்து ஏவுகணைகளின் தாயை பயன்படுத்த விரும்பினால், நாங்கள் அனைத்து ஏவுகணைகளின் தந்தையை கொண்டு தாக்குவோம் என்றார்.

அது என்ன அனைத்து ஏவுகணைகளின் தந்தை என்ற கேள்வி எழாமல் இல்லை. அமெரிக்காவின் ராணுவ பலம் அனைத்து ஏவுகணைகளின் தாயை கொண்டு அடையாளப்படுத்தும்போது, ஈரானின் ஏவுகணை திறனை குறிக்க அனைத்து ஏவுகணைகளின் தந்தை என்ற விசயம் கூறப்படுகிறது என தெரிகிறது.

ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள்

அது ஈரானின் தற்காப்பு மற்றும் ஊடுருவும் திறன் பெற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஈரானின் சிவப்பு கோட்டை அமெரிக்கா மீறினால், அதற்கு அமெரிக்கா விலை கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணையை ஈரான் பயன்படுத்தும் என கூறப்படுகிறது. ஆனால், அது எந்த ஏவுகணை, அதன் ஆற்றல், தாக்குதல் திறன் உள்ளிட்டவற்றை பற்றி காண்போம்.

ஈரானிடம் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் உள்பட பல்வேறு புது தலைமுறை ஆயுதங்கள் உள்ளன. இதில், ரஸ்டாகீஜ் என்ற ஏவுகணை அந்நாட்டின் மிக பெரிய மற்றும் அதி நவீன ஏவுகணையாக உள்ளது. அது 14 மீட்டர் நீளமும், 27 டன்கள் எடையும் கொண்டது. நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்க கூடியது என்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடியது என்றும் கூட கூறப்படுகிறது.

ரஸ்டாகீஜ் ஏவுகணை

இதனால், அனைத்து ஏவுகணைகளின் தந்தையாக ரஸ்டாகீஜ் ஏவுகணை இருக்கும் என்றும் ஊக தகவல் தெரிவிக்கின்றது. மற்ற ஆயுதங்களை போன்று இலக்கை தாக்கி, பேரழிவை ஏற்படுத்துவதுடன் நில்லாமல், ஈ.எம்.பி. எனப்படும் மின்காந்த அதிர்வையும் அது உற்பத்தி செய்யும்.

அதனால், முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதுடன் அவற்றை செயலிழக்க செய்யும். மின்சார உலைகள், தொலைத்தொடர்பு நெட்வொர்க் மற்றும் எதிரிகளின் பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றையும் கூட செயலிழக்க செய்து விடும் திறன் பெற்றது.

காசிம் ஏவுகணை

இதன்படி இந்த ஏவுகணை தாக்கினால், 80 சதுர கி.மீ. தொலைவிலுள்ள பரப்பில் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் கூறப்படுகின்றது. இதேபோன்று, ஈரானின் மறைந்த தளபதி காசிம் சுலைமானியின் பெயரில், அவரை நினைவுகூரும் வகையில் ஷாகித் ஹஜ் காசிம் ஏவுகணை, பத்தா-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை போன்றவையும் ஈரானிடம் உள்ளன.

இவற்றில், காசிம் ஏவுகணை 11 மீட்டர் நீளத்துடன், 1,400 கி.மீ. தொலைவை சென்று தாக்கும் திறன் பெற்றது. 7 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை 500 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும். இந்த ஏவுகணை மேக் 12 வேகத்தில் பயணிக்கும். மேக் 5 வேகத்தில் தாக்குதலை தொடுக்கும்.

எளிதில் ஊடுருவும்

இவற்றை இடைமறித்து தாக்குவதும் கடினம். அதன் பயணத்தின் இறுதி வரை தொடர்ந்து வழிகாட்டப்பட்டு கொண்டே இருக்கும். ஜி.பி.எஸ். சிக்னல்களை நம்பிக்கொண்டு இல்லாமல், அதிக தொலைவை அதிக துல்லியத்துடன் தாக்க கூடிய நவீன செயல்பாட்டு சாதனங்களையும் அது பயன்படுத்துகிறது.

இதுபோன்ற காரணங்களால், நவீன ஏவுகணை தடுப்பு சாதனங்களான தாட் மற்றும் பேட்ரியாட் போன்றவற்றை கூட எளிதில் ஊடுருவும் திறன் பெற்றது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அறிவிக்கப்படாத ஆயுதம்

அதனால், இந்த காசிம் ஏவுகணையே, அனைத்து ஏவுகணைகளின் தந்தை என ஈரான் குறிப்பிடுகிறது என கூறுவோரும் உள்ளனர். தவிரவும், காசிம் பசீர் ஏவுகணை மற்றும் எதிமேட் ஏவுகணை போன்றவையும் ஈரானிடம் இருக்கின்றன.

இதுபோன்ற மொத்த ஆயுதங்களையும், அனைத்து ஏவுகணைகளின் தந்தை என ஈரான் குறிப்பிடுகின்றதா? அல்லது இன்னும் அதிகாரப்பூர்வ முறையில் பெயர் அறிவிக்கப்படாமல் உள்ள ஆயுதம் ஒன்றை ஈரான் சுட்டி காட்டியிருக்கிறதா? என்ற தகவல் முழுமையாக வெளியிடப்படவில்லை.

SCROLL FOR NEXT