சென்னை,
தங்கம் விலை
"சாண் ஏறி முழம் சறுக்கும்" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது, முன்னேற்றம் சிறிய அளவில் இருந்தாலும், வீழ்ச்சி அதைவிட அதிகமாக இருப்பதை இவ்வாறு சொல்வார்கள். ஆனால், தங்கம் விலையை பொறுத்தவரை இந்த பழமொழி தலைகீழாகவே பொருந்துகிறது. அதாவது, "முழம் ஏறி சாண் சறுக்கும்" என்று மாற்றித்தான் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே சென்றாலும், எப்போதாவது சிறிய அளவில் குறைகிறது. இப்படியே, அதிக ஏற்றம், குறைந்த இறக்கம் என நிலையற்ற தன்மையில் சென்றாலும், தற்போது ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1 லட்சத்தையும் கடந்து வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர்
தற்போது, ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய நிலையில், தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று அதிர்ச்சியுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் விலை குறைந்து வருகிறது. இது மேலும் குறையுமா?, அவ்வாறு குறைந்தால் எவ்வளவு நாள் வரை அது நீடிக்கும்? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துவருகிறது.
விலை குறைவுக்கு காரணம் என்ன.?
தங்கம் விலை குறைந்து வருவதற்கு என்ன காரணம்? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
தற்போது, ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தாக்குதல் நடைபெற்று வருவதால், கச்சா எண்ணெய் விலை உயரும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கூடினால், பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால், சரக்கு போக்குவரத்துக்கான செலவு கூடி பணவீக்கமும் அதிகரிக்கும்.
இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைக்க நினைக்க மாட்டார்கள். அதற்கு மாறாக, வட்டி விகிதத்தை உயர்த்த அதிக வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், சந்தையில் பணப்புழக்கம் குறையும். இது தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கும் காரணமாக அமையும். அதேபோல், இதுவரை தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், அதன் மூலம் கிடைத்த லாபத்தை தற்போது எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவும் தங்கம் விலை குறைந்து வருவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
மேலும், டாலர் கையிருப்பை அதிகரிக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் பலரும், தங்கத்தில் இருந்து லாபத்தை எடுத்து டாலரில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், டாலர் குறியீடு உயரத் தொடங்கியிருக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நீடிக்கும் வரை தங்கத்தின் விலை குறையும் என்றே கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறது.