மாலி பவுல் 
சிறப்புக் கட்டுரைகள்

முட்டையை அடைகாக்காத வினோதப் பறவை எது தெரியுமா?

கால்களாலேயே மண்ணையும் இலைகளையும் தள்ளி, சுமார் 3 மீட்டர் அகலமும், 1 மீட்டர் உயரமும் கொண்ட ஒரு பிரம்மாண்ட மண் மேட்டையே தங்களின் கூடாக மாற்றுகின்றன.

மாலி பவுல்

உலகில் உள்ள பெரும்பாலான பறவைகள் தங்களின் முட்டைகள் மீது அமர்ந்து, உடலின் வெப்பத்தை கொடுத்து அடைகாப்பதே இயற்கை. ஆனால், இதற்கு முற்றிலும் விதிவிலக்காக, தனக்கென ஒரு சொந்த "ஏசி இன்குபேட்டரை" உருவாக்கி முட்டையிடும் விசித்திரமான பறவைதான் ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் 'மாலி பவுல்'

காட்டின் இன்ஜினியர்

ஆஸ்திரேலியாவின் வறண்ட புதர் காடுகளில் வசிக்கும் இந்த மாலி பறவைகளை அங்குள்ள மக்கள் "காட்டின் இன்ஜினியர்" என்றே அழைக்கிறார்கள். ஏனெனில், இவை கட்டும் கூடு சாதாரணமானவை அல்ல. கால்களாலேயே மண்ணையும் இலைகளையும் தள்ளி, சுமார் 3 மீட்டர் அகலமும், 1 மீட்டர் உயரமும் கொண்ட ஒரு பிரம்மாண்ட மண் மேட்டையே தங்களின் கூடாக மாற்றுகின்றன. இந்த மெகா கூட்டை கட்டி முடிக்க ஆண் பறவைக்கு குறைந்தது சில மாதங்கள் வரை தேவைப்படுகிறது.

இயற்கை தெர்மாமீட்டர்

இந்த மேட்டின் உள்ளே இருக்கும் வெப்பநிலையை ஆண் பறவை தனது அலகு மற்றும் நாக்கின் மூலம் தினமும் துல்லியமாக கணிக்கிறது. முட்டைகள் பொரிக்க எப்போதும் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே உள்ளே இருக்க வேண்டும். வெப்பம் அதிகமானால், மேல் மண்ணை தோண்டி உள்ளே காற்றை செலுத்தி குளிர வைக்கும். வெப்பம் குறைந்தால், மீண்டும் மண்ணை போட்டு மூடி சூடாக்கும். ஒரு தானியங்கி ஏசி மெஷின் போல இந்த வெப்பநிலையை ஆண்டு முழுவதும் இப்பறவை பராமரிக்கிறது.

குஞ்சுகளின் சோக கதை

முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள், தங்களின் தாய் அல்லது தந்தையை தன் வாழ்நாளில் பார்க்கவே முடியாது. முட்டை மண்ணுக்குள் புதைந்திருப்பதால், குஞ்சுகள் பிறந்தவுடன் தங்களின் பலமான கால்களால் மண்ணை தோண்டி மேலே வர வேண்டும். கிட்டத்தட்ட 15 மணி நேரம் போராடி வெளியே வரும் குஞ்சுகள், அன்றைய தினமே தனியாக ஓடவும், தனக்கான உணவை தேடவும் பழகிக் கொள்கின்றன. பெற்றோர் துணையின்றி, இயற்கையாகவே இவற்றுக்கு இந்த தற்காப்பு கலை தெரிந்து விடுகிறது.

அழிவின் விளிம்பில் பறவை

ஆஸ்திரேலியாவில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ, வாழ்விட அழிப்பு மற்றும் காடுகளில் சுற்றி திரியும் நரிகளின் வேட்டை காரணமாக, இந்த மாலி பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.