சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்பில் சிறந்து விளங்கும் நாடுகள் எவை...? - தெரிந்து கொள்வோமா...!

தொழில் வாழ்க்கையை மேம்படுத்த விரும்புவோருக்கு சிங்கப்பூர் மிகச்சிறந்த நாடாகும்.

வேலைவாய்ப்பு

உலகின் மிகச்சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் நாடுகளின் பட்டியலை 'ஹென்லி ஆப்பர்சூனிட்டி இன்டெக்ஸ்' நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. ஒரு நாட்டின் வருவாய் ஈட்டும் திறன், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புச் சூழல், கல்வித்தரம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் குடியேறி பணிபுரிய விரும்புவோருக்கு, இந்த பட்டியல் உதவிகரமாக இருக்கிறது. அதன்படி 2026-ம் ஆண்டு உலகின் சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் நாடுகளை இந்த தொகுப்பில் காண்போம்...

சுவிட்சர்லாந்து

வருவாய் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதில் முன்னணியில் இருப்பதால் இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. நிதி நிலைத்தன்மை மற்றும் நீண்ட கால தொழில் வளர்ச்சியைத் தேடும் தொழில் வல்லுநர்களுக்கு இந்நாடு சொர்க்கமாக விளங்குகிறது. அதிக ஊதியம், நிலையான பொருளாதாரம் மற்றும் உலகளாவிய அங்கீகாரம் ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்களாகும்.

சிங்கப்பூர்

நிதி, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் உலகளாவிய நிபுணர்களை ஈர்ப்பதில் சிங்கப்பூர் திறமையான சந்தையைக் கொண்டுள்ளது. ஆசியாவில் தொழில் வாழ்க்கையை மேம்படுத்த விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த நாடாகும்.

ஆஸ்திரேலியா

வலுவான தொழிலாளர் சந்தை, வேலை-வாழ்க்கை சமநிலை ஆகிய காரணிகளால் ஆஸ்திரேலியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாட்டில் தகுதியுள்ள தொழில் நிபுணர்களுக்கு பல்வேறு துறைகளில் தேவை அதிகமாக உள்ளது. வேலை வாய்ப்புடன் சேர்த்து, உயர்தரமான வாழ்வாதாரத்தையும் இந்நாடு வழங்குகிறது.

இங்கிலாந்து

மிகச்சிறந்த கல்வி முறை காரணமாக இங்கிலாந்து 4-வது இடத்தில் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இருப்பதால், இங்கிருந்து வெளிவரும் மாணவர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்கு அமைந்திருப்பது தொழில் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கிறது.

அமெரிக்கா

இங்கிலாந்துக்கு நிகரான தரவரிசையில் உள்ள அமெரிக்கா, வருமானம் ஈட்டும் திறனில் முன்னணியில் உள்ளது. பல்வேறு தொழில்துறைகளில் அதிக வாய்ப்புகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் அமெரிக்கா ஊக்குவிக்கிறது. இருப்பினும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 'வாழ்க்கைத் தரம்' பிரிவில் சற்று பின்தங்கியுள்ளது.

கனடா

6-வது இடத்தில் உள்ள கனடா, நிலையான தொழில் வளர்ச்சி மற்றும் உயர்தர வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது. உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கும் வகையில் எளிமையான குடியேற்ற முறைகளையும், சமூகப் பாதுகாப்பை யும் கனடா வழங்குகிறது. நிலையாக வசிக்க விரும்புவோருக்கு விருப்பமான நாடாகவும் இருக்கிறது.