சென்னை,
முக்கிய ரெயில் நிலையங்களின் பெயருக்கு பின்னால் சென்டிரல், ஜங்ஷன், கண்டோன்மென்ட், டெர்மினஸ் என்று ஏன் வருகிறது? என்பது குறித்து இங்கே பார்க்கப்போகிறோம். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் இது.
பயணங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. அந்த வகையில், பல வகை பயணங்கள் இருந்தாலும், ரெயில் பயணத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற கட்டணத்தில், பல்வேறு பிரிவுகள் இருப்பதால், ரெயில் பயணத்தை எல்லோருமே விரும்புவர்.
நாம் ரெயில்களில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது, ஒவ்வொரு ஊரையும் ரெயில் கடக்கும்போது, மஞ்சள் நிறத்திலான பெயர் பலகையில், கருப்பு நிறத்தில் ஊரின் பெயர் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருப்பதை காண்போம்.
ஆனால், சில முக்கிய ஊர்களில் ரெயில் நின்று செல்லும்போது, ஊர் பெயருக்கு பின்னால் சென்டிரல், ஜங்ஷன், கண்டோன்மெண்ட், டெர்மினஸ் என்று கூடுதலாக சில அடைமொழிகள் இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த அடைமொழிகளுக்கு பின்னால் இருக்கும் விஷயத்தை யாரும் தெரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்வதில்லை.
தமிழகத்தில், சென்னை சென்டிரல், மதுரை ஜங்ஷன், வேலூர் கண்டோன்மென்ட், கன்னியாகுமரி டெர்மினஸ் என்று ரெயில் நிலையங்களில் பெயர் பலகை இருக்கிறது. அதுபற்றித்தான் இங்கே விரிவாக பார்க்கப்போகிறோம்.
தமிழகத்தில் ஒரேவொரு ரெயில் நிலையத்திற்குத்தான் சென்டிரல் பெயர் வருகிறது. தலைநகர் சென்னையில் உள்ள ரெயில் நிலையம்தான் அது. அதாவது, அந்த நகரத்திலேயே பழமையான, முக்கியமான, அதிக பயணிகள் வந்துசெல்லும் ரெயில் நிலையமாக அது இருப்பதால்தான், சென்னை சென்டிரல் என்று கூறுகிறோம். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் முக்கிய ரெயில்கள் அனைத்தும் இங்கிருந்தே புறப்படுவதால், இதற்கு சென்டிரல் என்று பெயர் உள்ளது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஊர்களில் இருந்து வரும் ரெயில்கள், ஒரு ஊரில் சந்திக்கும்போது, அந்த இடம்தான் ஜங்ஷன். உதாரணமாக, திருநெல்வேலியை எடுத்துக்கொண்டால், நாகர்கோவில், செங்கோட்டை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து வரும் ரெயில்கள் இங்கே சங்கமிப்பதால், திருநெல்வேலி ஜங்ஷன் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, இதுபோன்ற ஜங்ஷன் ரெயில் நிலையங்களில் வந்து இறங்கினால், அங்கிருந்து வேறு ஊர்களுக்கு ரெயில் மூலம் செல்ல முடியும். அந்த வகையில், இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ஜங்ஷனில் இருந்துதான் அதிகபட்சமாக 7 ஊர்களுக்கு ரெயில்கள் செல்கின்றன.
இந்த வார்த்தை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதாவது, ராணுவ முகாம்கள் இருக்கின்ற இடத்திற்கு அருகில் வரும் ரெயில் நிலையத்தைத்தான் கண்டோன்மென்ட் என்று அழைக்கிறோம். அந்த வகையில், தமிழகத்தில் வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் உள்ளது. இதேபோல், பெங்களூரு கண்டோன்மென்ட், ஆக்ரா கண்டோன்மென்ட் என இந்தியாவில் பல ரெயில் நிலையங்கள் இருக்கின்றன.
ஒரு ரெயில் நிலைய பெயருக்கு பின்னால் இந்த வார்த்தை வந்தால், அத்துடன் ரெயில் பாதை முடிந்துவிடுகிறது என்று அர்த்தம். தண்டவாளம் அந்த ஊரோடு முடிந்துவிடும். ரெயில்கள் அனைத்தும் திரும்பிச் செல்லும் நிலையே ஏற்படும். உதாரணமாக, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி டெர்மினஸ் ரெயில் நிலையம் உள்ளது. அந்த ரெயில் நிலையத்துடன் தண்டவாளம் முடிந்துவிடுகிறது என்பதை அது குறிக்கிறது. இதேபோல், மும்பையில் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரெயில் நிலையம் உள்ளது.