சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த 5-ந்தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது, பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஆண்டுதோறும் பட்ஜெட் போடப்படுவது ஏன்? அது எவ்வாறு உருவாக்கப்படுகிறது? என்பதை தெரிந்துகொள்வோம்.
ஒவ்வொரு மாதமும் குடும்பத்துக்கு எவ்வளவு வருமானம் வருகிறது, அந்தப் பணத்தை வைத்து உணவு, கல்வி, உடை, மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பெற்றோர் எப்படி செலவு செய்வது என்று முன்கூட்டியே திட்டமிடுகிறார்களோ? அதுபோலவே ஒரு நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று திட்டமிடுவது 'பட்ஜெட்' எனப்படுகிறது.
தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு வழிகளில் வருமானம் கிடைக்கிறது. வரி, கட்டணங்கள், மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதி பகிர்வு போன்றவை இதில் அடங்கும். இந்தப் பணத்தை வைத்து அடுத்த ஓராண்டில் பள்ளிக் கல்வி, மருத்துவம், சாலை போக்குவரத்து, விவசாயம், மக்கள் நலத் திட்டங்கள் போன்றவற்றுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை அரசு திட்டமிடுகிறது.
இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) என்று கூறுகிறோம். இதனை நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, அதன் மீது உறுப்பினர்கள் விவாதிப்பார்கள். பின்னர் அரசு செலவுகளுக்கான ஒப்புதல்கள் பெறப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பட்ஜெட் என்பது அரசுக்கு மட்டுமல்ல; நிறுவனங்களிலும் தயாரிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும். வீட்டிற்கும் பட்ஜெட் உண்டு. அது எழுத்தில் வழங்காத மனதளவில் கணக்கீடு செய்யப்படும் பெரும்பாலான நடைமுறையாகும். எழுத்தில் இல்லாத காரணத்தாலும், செலவினங்கள் எதிர்பாராத நிலையில்வரும் சூழலிலும் வெற்றிகரமாக திட்டமிட்டப்படி நடைமுறைக்கு வராமல் இன்னல் நிலையும் ஏற்படும்.
ஒரு குழந்தையிடம் ரூ.100 இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ரூ.40 புத்தகங்களுக்கு, ரூ.30 உணவுக்கு, ரூ.20 சேமிப்புக்கு, ரூ.10 பிற தேவைகளுக்கு என்று திட்டமிட்டு செலவு செய்தால், அதுதான் பட்ஜெட் போடுவதாகும். பட்ஜெட் என்பது பணத்தை சரியாகத் திட்டமிட்டு செலவு செய்வதற்கான வழிகாட்டியாகும். மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அரசு பட்ஜெட்டை உருவாக்குகிறது.
அடிப்படையில் நாட்டு பட்ஜெட்டுக்கும், வீட்டு பட்ஜெட்டுக்கும் வேறுபாடு உண்டு. வீட்டு பட்ஜெட்டைப் பொறுத்த அளவில் செலவு என்பது வரவுக்குள் அடங்கியிருக்க வேண்டும். செலவு போக மீதி சேமிப்பாக மாறும். செலவு என்பதை வரவை மீறி அனுமதிக்கும் பொழுது கடன் வாங்கி அல்லல்படும் நிலை ஏற்படும்.
ஆனால் நாட்டு பட்ஜெட் அப்படியானதல்ல; நாட்டிற்கான பட்ஜெட்டிற்கு மக்களின் நல்வாழ்வு, பல தளங்களிலும் பொருளாதார முன்னேற்றம் காண வேண்டிய கட்டாயம் உள்ளது. ஓராண்டில் நடைமுறையாக வேண்டிய வளர்ச்சித் திட்டச் செலவு, நிதி உதவிகளைக் கணக்கீட்டு அதற்கு ஏற்ற அளவில் வரி வருவாயைப் பெருக்கவும் வேண்டும்.
அதே நிலையில் மக்கள் நலன் கருதி செலவினங்களும் அதிகரிக்க வேண்டும். வருவாயை மீறிய செலவினங்கள் அரசு தாக்கல் செய்திடும் பட்ஜெட்டில் இருக்கும். வருவாய்க்கு அடங்கியே செலவினங்கள் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வருவாய்க்குள் அடங்கிய செலவினங்கள் உள்ள பட்ஜெட்டால் நாட்டிற்கு தேவைப்படும் வளர்ச்சி, முன்னேற்றம் என்பனவற்றை அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது.