நீச்சல் ஒரு சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்ல; உடலின் பல்வேறு தசைகளை ஒரே நேரத்தில் செயல்பட வைக்கும் முழுமையான உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வது இதய ஆரோக்கியம், தசை வலிமை, மன அமைதி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை தரக்கூடியதாகும். நீச்சல் பயிற்சியின் முக்கியமான நன்மைகள் என்னென்ன, அதனை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இதய தசைகளின் செயல்திறனையும், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த உதவும். தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெறுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
கை, கால், முதுகு, வயிறு உள்ளிட்ட பெரும்பாலான தசைகள் நீச்சல் அடிக்கும்போது முழுமையாக செயல்படும். அதனால் தசை வலிமையையும், உடல் சக்தியையும் அதிகரிக்க நீச்சல் துணை புரியும்.
இதயம் மற்றும் நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்தும். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யும் திறனை வளர்த்தெடுக்கும்.
மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்கவும், தசைகள் மற்றும் மூட்டுகள் சுலபமாக இயங்கவும், நெகிழ்வுத் தன்மை பெறவும் வழிவகை செய்யும்.
நீச்சல் அடிக்கும்போது நீரின் மிதவை தன்மை காரணமாக மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம் குறையும். குறிப்பாக மூட்டு வலி உள்ளவர்கள் அல்லது காயத்தில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு, மருத்துவரின் ஆலோசனையுடன் நீச்சல் ஒரு பொருத்தமான பயிற்சியாக இருக்கலாம்.
நீர் உடலுக்கு மென்மையான உணர்வை தருவதுடன், தசை தளர்வை ஊக்குவிக்கும். நீச்சல் பழக்கத்தை தொடர்வது கவலை மற்றும் மன அழுத்தம் குறைய வித்திடும். மன அமைதியும் கிடைக்கக்கூடும்.
நீச்சல் பயிற்சி கலோரிகளை எரிக்க உதவிடும். நீச்சல் பயிற்சியுடன் சமச்சீரான உணவுப்பழக்கத்தையும் மேற்கொண்டால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும்.
கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த நீச்சல் உதவக்கூடும். பொதுவாக நீச்சல் பயிற்சி மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது.
தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவக்கூடும்.
உடற்பயிற்சியின்போது எண்டார்பின் போன்ற ஹார்மோன்கள் சுரப்பதால் உற்சாக உணர்வு அதிகரிக்கலாம். மன நிலையும் மேம்படக்கூடும்.
நீச்சல் பயிற்சி பெறுவதற்கு முன்பு போதுமான அளவு தண்ணீர் குடித்து, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீச்சல் அடிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்ளுங்கள். சரியான நீச்சல் உடை, கண்ணாடி, தேவைப்பட்டால் நீச்சல் தொப்பி போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.
மிகக்கடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு உடனே நீந்தக்கூடாது. வெயிலில் நீண்ட நேரம் செலவிட்டு உடல் சூடாக இருந்தால் ஓய்வு எடுத்துவிட்டு உடல் இயல்புநிலைக்கு திரும்பிய பிறகு நீந்துங்கள். கடுமையான காது, மூக்கு அல்லது தொண்டை வலி இருந்தால் நீந்தக்கூடாது.
நீச்சல் தெரியாதவர்கள் தனியாக நீந்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் ஆரம்பநிலை பயிற்சி பெறுபவர்கள், பயிற்சியாளர் அல்லது பொறுப்பான பெரியவரின் கண்காணிப்பில் நீந்துவது பாதுகாப்பானது.
மேலும், உடல்நலப் பிரச்சினைகள், இதய நோய், சுவாசப் பிரச்சினைகள் அல்லது சமீபத்திய காயம் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.