புதுடெல்லி,
இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு ஈராக், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து தினமும் 27 லட்சம் பீப்பாய்களில் கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. இவை அனைத்தும் கப்பல்கள் மூலமாகவே இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன. பின்னர், கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை பிரித்து எடுக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை
இவ்வாறு, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வரும் அனைத்து கப்பல்களும் ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் வரவேண்டும். தற்போது, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்களால், போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால், சென்னை மற்றும் இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் சுமார் 60-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
80 சதவீத எரிவாயு தேவை
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மட்டும் வாங்கவில்லை. சமையல் எரிவாயுவையும் வாங்குகிறது. சுமார் 80 சதவீதம் எரிவாயு அங்கிருந்தே நமக்கு வருகிறது.
இந்தியாவுக்கு நாள் ஒன்றுக்கு 60 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. தற்போது, விநியோகித்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நேற்று இரவு முதல் சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயருமா?
அதேபோல், கச்சா எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பெட்ரோல், டீசலில், நாள் ஒன்றுக்கு 30 கோடி லிட்டர் பெட்ரோலும், 40 கோடி லிட்டர் டீசலும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், விலை உயர்வு ஏற்பட்டுள்ளது போல், கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டால், பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
போர் சூழல் நீடித்தால்...
தற்போதைய நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்கு ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதற்கு அமெரிக்காவும் அனுமதி அளித்ததாக கூறுகிறது. ஆனால், இஸ்ரேல் - ஈரான் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்தால், கச்சா எண்ணெய் வரத்து தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், போர் சூழல் நீடித்தால், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.