பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்டு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்வது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் முடிவு எடுப்பதற்கான சில வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பல வீடுகளில் மகிழ்ச்சியோடு சேர்ந்து ஒரு புதிய பதற்றமும் தொடங்குகிறது. எந்தக் கல்லூரி, எந்தப் பிரிவு, எந்த நகரம் என்ற கேள்விகள் குடும்பம் முழுவதையும் ஆக்கிரமித்து விடுகின்றன. அந்த நேரத்தில் பல பெற்றோர், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பிரபலமான கல்லூரிகள், உறவினர்களின் ஆலோசனைகள் அல்லது சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை மட்டுமே நம்பி முடிவு எடுக்கிறார்கள். ஆனால் உண்மையில், பொறியியல் கலந்தாய்வு (இன்ஜினியரிங் கவுன்சிலிங்) என்பது ஒரு சீட்டை (Seat) பெறும் நிகழ்வு அல்ல. ஒரு மாணவரின் அடுத்த நாற்பது ஆண்டு கால தொழில் வாழ்க்கைக்கான அடித்தளத்தை அமைக்கும் தருணம் ஆகும்.
பல குடும்பங்களில் இன்னும் இந்தப் பிரிவில் சேர்ந்தால் நல்ல சம்பளம், அந்தக் கல்லூரிக்குத்தான் மதிப்பு, எங்கள் உறவினர் சொன்னது சரி என்ற எண்ணங்களே முடிவை நிர்ணயிக்கின்றன. ஆனால் ஒரு மாணவரின் திறமை, ஆர்வம், கற்றல் முறை, சிந்தனைத் திறன் ஆகியவையே மிக முக்கியம். பெற்றோர் தங்கள் விருப்பத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, உனக்கு எந்தத் துறையில் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகம் என்று தன் பிள்ளைகளைக் கேட்பதுதான் நல்லது. அதுதான் மாணவரின் எதிர்கால வெற்றிக்கு வலுவான தொடக்கமாக அமையும்.
இன்றைய இன்டர்நெட் காலத்தில் தகவல்கள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் நம்பகமான தகவல்கள் என்று சொல்லிவிட இயலாது. கவுன்சிலிங் விஷயத்தில் விளம்பரங்கள், சமூக வலைத்தள பதிவுகள் அல்லது யூடியூப் காணொலிகளை மட்டும் நம்பி முடிவு எடுப்பது ஆபத்தானது.
அதிகாரப்பூர்வ தகவல்கள், அங்கீகாரங்கள், வேலைவாய்ப்பு பதிவுகள், ஆய்வக வசதிகள், ஆசிரியர்களின் தகுதி, தொழில்துறை இணைப்புகள் போன்றவற்றை மாணவரின் பெற்றோர்கள் முதலில் ஆராய வேண்டும். யார் சொன்னார்கள் என்பதைக் காட்டிலும் ஆதாரம் என்ன என்பதையே முக்கியமாகக் கருத வேண்டும்.
வெறும் கட்-ஆஃப் மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு கற்பனையான எதிர்பார்ப்புகளை மனதில் வளர்த்துக்கொள்ளக் கூடாது. தரவரிசைப் பட்டியல் (Rank List) வெளியானவுடன், தரவுகளின் அடிப்படையில் நிதர்சனத்தைக் கணிக்க வேண்டும்.
*கல்லூரிக்கு தேவையான அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் அங்கீகாரம் உள்ளதா,
*ஆசிரியர்களின் அனுபவமும், ஆராய்ச்சி பங்களிப்பும் எப்படி உள்ளது,
*கடந்த சில ஆண்டுகளின் வேலைவாய்ப்பு (Placement) நிலை என்ன,
*தொழிற்பயிற்சி (Internship) மற்றும் தொழில்துறை சார்ந்த இணைப்புகள் உள்ளனவா,
*ஆய்வகங்கள், நூலகம், விடுதி, பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் திருப்திகரமாக உள்ளனவா,
*முன்னாள் மாணவர்களின் (Alumni) சாதனைகள் என்ன கூறுகின்றன,
ஆகிய விபரங்களை தெளிவாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
பெற்றோர் கல்லூரி முன்னுரிமைப் பட்டியலை (Choice Filling) அமைக்கும் போது, கீழ்க்கண்ட படிநிலை உத்தியை கையாளலாம்.
உச்ச நிலை (Top Layer - Aspirational Choices) - பிள்ளையின் கட்-ஆஃப் மதிப்பெண்ணை விட சற்று அதிகமான கட்-ஆஃப் கொண்ட, அவர் சேர ஆசைப்படும் முன்னணி கல்லூரிகள்.
நடு நிலை (Middle Layer Realistic Choices) - தற்போதைய தர வரிசைக்கு நிச்சயம் கிடைக்கக்கூடிய தகுதியான கல்லூரிகள்.
அடித் தளம் (Base Layer - Safety Net Options) - எந்தச் சூழலிலும் கைவிடாத, பாதுகாப்பான மாற்று வாய்ப்புக் கல்லூரிகள் (Safety Options).
எதிர்பார்த்த கல்லூரி அல்லது பாடப்பிரிவு கிடைக்காமல் போனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்றோர்களும் வளர்த்துக் கொண்டு, குழந்தைகளுக்கும் தைரியம் அளிக்க வேண்டும்.
முதல் சுற்றிலேயே விருப்பமான இடம் கிடைக்காவிட்டால், அடுத்தடுத்த சுற்றுகளுக்கான மாற்றுத் திட்டங்களை (Plan B / Backup Options) தயாராக வையுங்கள்.
பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடனோ அல்லது உறவினர்களுடனோ தன் குழந்தையை ஒப்பிட்டுப் பேசுவதைத் (Avoid Comparison) தவிருங்கள்.
தோல்வி மனப்பான்மை வராதபடி நேர்மறை எண்ணங்களை ஊட்டி, மன அழுத்தத்தை (Counseling Stress) தவிர்க்கவும்.
இன்றைய வாழ்க்கைச் சூழலில் பட்டப் படிப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மட்டுமே வெற்றியைத் தரும் காலம் மாறிவிட்டது. இன்று எந்தப் பிரிவில் படித்தாலும், புதிய திறன்கள் (Skills), பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் (Problem Solving), தொடர்புத் திறன் (Communication Skills), குழுவாகச் செயல்படும் திறன் போன்றவையே வேலைவாய்ப்பில் அதிக மதிப்பைப் பெறுகின்றன. எனவே, மாணவர் வளர்ச்சிக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் கல்லூரியைத் தேர்வு செய்வதே பெற்றோரின் கடமையாகும்.
பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் கல்விக் கட்டணத்தை மட்டும் கணக்கிடுவது போதாது. அதில் உள்ள விடுதி, உணவு, புத்தகங்கள், பயிற்சிகள், மென்பொருள் (Software), இணைய வசதி, பயணச் செலவு போன்றவற்றையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
குடும்பத்தின் நிதிநிலையை மறைக்காமல் மாணவருடனும் பகிர்ந்து பேசுவது நல்ல புரிதலை உருவாக்கும். தேவையானால் கல்விக் கடன் (Education Loan), உதவித்தொகை (Scholarship), அரசின் நிதியுதவி திட்டங்கள் போன்றவற்றையும் ஆராய வேண்டும்.
கல்லூரியில் சேர்ந்ததும் பெற்றோரின் பணி முடிந்து விடுவதில்லை. புதிய சூழலுக்கு மாணவர் எவ்வாறு தன்னை மாற்றிக் கொள்கிறார், வகுப்புகளில் ஆர்வத்துடன் பங்கேற்கிறாரா, புதிய திறன்களைக் கற்றுக்கொள்கிறாரா. தொழிற்பயிற்சிகளில் கலந்து கொள்கிறாரா என்பதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். மதிப்பெண்களுடன் சேர்த்து தன்னம்பிக்கை. ஒழுக்கம், தலைமைத்திறன் (Leadership), புதுமைச் சிந்தனை (Innovation) போன்றவற்றையும் ஊக்குவிக்க வேண்டும்.
இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த சூழ்நிலையில் கல்லூரியில் பெரும் ஒரு பட்டம் மட்டும் வாழ்க்கையின் வெற்றியை உறுதி செய்யாது. சரியான துறை, சரியான கல்லூரி, சரியான திறன் வளர்ப்பு மற்றும் தொடர்ந்து கிடைக்கும் பெற்றோர் ஆதரவு ஆகியவற்றின் கூட்டுத்தொகையே வெற்றியை உருவாக்குகிறது. எனவே அந்த நாளில் ஒரு பெற்றோராக மட்டும் அல்ல, ஒரு தொழில் வழிகாட்டியாக (Career Mentor) சிந்தித்து செயல்படுங்கள். அதுவே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வழங்கும் மிகப் பெரிய பரிசாக இருக்கும்.