செய்திகள்

உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகம்: தொழிலாளியை அடித்து கொன்ற தம்பதி உள்பட 3 பேர் கைது திண்டுக்கல் அருகே பரபரப்பு

திண்டுக்கல் அருகே தொழிலாளியை அடித்து கொன்ற தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகமாடிய சம்பவம் திண்டுக்கல் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னாளபட்டி,

திண்டுக்கல் அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 42). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. அவருடைய மனைவி மரியா. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். அதேபகுதியை சேர்ந்தவர் பனிமாதா (42). இவர், தனது கணவர் புஷ்பராஜியிடம் இருந்து பிரிந்து மகள் ஜெனிபருடன் வசித்து வந்தார்.

கணவரை பிரிந்த பனிமாதாவும், மனைவியை பிரிந்த இருதயராஜூம் சேர்ந்து சின்னாளப்பட்டி அருகே அம்பாத்துரையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். பனிமாதாவின் மகள் ஜெனிபருக்கும், அருள்பிரகாசம் என்பவருக்கும் திருமணமாகி தனியாக சென்று விட்டனர். இருதயராஜ் குடித்து விட்டு வந்து பனிமாதாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருதயராஜ் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை சின்னப்பன், சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் ரமேஷ், சின்னாளபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார், பனிமாதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பனிமாதா, தனது மகள், மருமகனுடன் சேர்ந்து இருதயராஜை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து பனிமாதா, ஜெனிபர், அருள்பிரகாசம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பனிமாதா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

மதுபானம் குடித்து விட்டு வந்து இருதயராஜ் அடிக்கடி என்னிடம் தகராறு செய்து வந்தார். அதன்படி சம்பவத்தன்று குடிபோதையில் வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து இருதயராஜ் தலையில் அடித்தேன். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

பின்னர் என்னுடைய மகள் ஜெனிபருக்கு தகவல் தெரிவித்தேன். அவரும், அவருடைய கணவர் அருள்பிரகாசமும் அங்கு வந்தனர். பின்னர் இருதயராஜை சோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. கொலையை மறைக்க திட்டமிட்டோம்.

அதன்படி நாங்கள் 3 பேரும் சேர்ந்து, அவருடைய உடலை கயிறு கட்டி தூக்கில் தொங்கவிட்டோம். பின்னர் எனது மகளும், மருமகனும் தங்களது சொந்த ஊரான காமலாபுரத்துக்கு சென்று விட்டனர். நானும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வந்து, இருதயராஜ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினேன்.

ஆனால் போலீசார் துருவி, துருவி விசாரணை செய்ததில் உண்மையை ஒப்பு கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். தொழிலாளியை அடித்து கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.