தமிழக செய்திகள்

‘‘அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டேன்’’; சசிகலா ஆவேச பேச்சு

‘அடக்குமுறைகளுக்கு நான் என்றும் அஞ்சமாட்டேன்’, என்று தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார்.

சசிகலா

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வருகையில், வாணியம்பாடி பகுதியில் திரண்டிருந்த தொண்டர்களின் வரவேற்பை சசிகலா பெற்றுக்கொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் காரில் இருந்தபடியே அவர் பேசினார். அவர் பேசியதாவது:-

கொரோனாவில் இருந்து மீண்டேன்

தெய்வ அருளாளும், மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அக்கா ஜெயலலிதாவின் ஆசியாலும், நான் இந்த கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன்.

உடல்நலம் பூரண குணமடைய உதவிய கர்நாடக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்நாடக அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜெயலலிதா சொன்னதுபோல் எனக்கு பின்னாலும் இந்த அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தழைத்தோங்கி இருக்கும் என்ற அந்த நல்ல எண்ணத்தை தொடர, என் வாழ்நாள் முழுவதும், கட்சியே குடும்பம், குடும்பமே கட்சியாக எஞ்சியிருக்கும் என் வாழ்நாளை கட்சி முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்பேன்.

பொது எதிரி

ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்றுமே எனக்கும் பிள்ளைகள் தான். கட்சி எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்து இருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவையாக கட்சி மீண்டு எழுந்திருக்கிறது. ஒற்றுமையாக ஓரணியில் நின்று நமது பொது எதிரியை மீண்டும் தமிழக ஆட்சி கட்டிலில் அமரவிடாமல் வீழ்த்த ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம், என்னுடைய குறிக்கோள்.

எம்.ஜி.ஆர். கட்டிக்காத்து, ஜெயலலிதா வழியில் வெற்றிநடையுடன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் இயக்கம் சிலரின் சொந்த விருப்புவெறுப்புகளால் சிதைந்து விடக்கூடாது.

அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன்

என் இறுதிமூச்சு உள்ள வரை இந்த இயக்கத்துக்காக என்றும் உழைத்திருப்பேன். ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வரும் தேர்தலில் வெற்றிக்கனியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க உறுதியேற்க வேண்டும்.

எம்.ஜி.ஆரின் பொன்மொழிக்கேற்ப அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை, தமிழக மக்களுக்கும், என் தொண்டர்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைகளுக்கு நான் என்றும் அஞ்சமாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீவிர அரசியலில் ஈடுபடுவேன்

கிருஷ்ணகிரியை அடுத்த நெக்குத்தி டோல்கேட் பகுதி அருகே நிருபர்களுக்கு சசிகலா பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 4 வருடங்களுக்கு பிறகு தொண்டர்களை சந்திக்கிறீர்கள்? இந்த வரவேற்பை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- என்னை பார்க்க தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களை கண்டும், அவர்களது வரவேற்பை பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி. தொண்டர்களுக்கு மகிழ்ச்சி.

கேள்வி:- தீவிர அரசியலில் ஈடுபடுவீர்களா?

பதில்:- நிச்சயமாக... தொண்டர்களுக்காக நிச்சயம் ஈடுபடுவேன்.

பொறுத்திருந்து பாருங்கள்

கேள்வி:- உங்கள் மீது அமைச்சர்கள் புகார் அளித்துள்ளார்களே?

பதில்:- அது அவர்களது பயத்தை காட்டுகிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

கேள்வி:- அ.தி.மு.க. அலுவலகம் செல்ல திட்டுமிட்டுள்ளீர்களா?

பதில்:- கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்.

மக்களுக்கு தெரியும்

கேள்வி:- ஜெயலலிதா நினைவிடம் அவசர அவசரமாக மூடப்பட்டுள்ளதே?

பதில்:- இதெல்லாம் எதை காட்டுகிறது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

கேள்வி:- அ.தி.மு.க.வை கைப்பற்றுவீர்களா?

பதில்:- மிக விரைவில் உங்கள் எல்லோரையும் நான் சந்திப்பேன். அப்படி சந்திக்கும்போது நாம் விரிவாக பேசலாம்.

மேற்கண்டவாறு சசிகலா பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT