தேர்தல் விடுமுறை நாட்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவும், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகவும் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கே.வி.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
போலீசார் நடத்திய சோதனையில் அந்த வீட்டில் பெட்டி பெட்டியாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 263 மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அடுத்த அறையில் தலா 50 கிலோ எடை கொண்ட 20 மூடை ரேஷன் அரிசி (மொத்தம் 1,000 கிலோ- 1 டன்.) பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அந்த வீடு சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவர் நெல்லையைச் சேர்ந்த ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததும் தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 263 மதுபான பாட்டில்கள் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. கைப்பற்றப்பட்ட 20 மூடை ரேஷன் அரிசி முறைப்படி உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மது மற்றும் ரேஷன் அரிசி ஒரே இடத்தில் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.