துாத்துக்குடி,
துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் நேரடி சரக்கு பெட்டக கப்பல் சேவைக்கு சரக்குகளை சேமிக்க இலவச வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் மூலம் சரக்கு பெட்டக போக்குவரத்தை எளிதாக்கி ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து சேவைகள் மூலம் கையாளப்படும் ஏற்றுமதி-இறக்குமதி சரக்குகள் அடங்கிய சரக்கு பெட்டகங்களுக்கு 10 நாட்கள் இலவச சேமிப்பு வசதியை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த சரக்கு பெட்டகங்களை சேமித்து வைப்பதற்காக சுமார் 40 ஆயிரம் சதுர மீட்டர் கூடுதல் பரப்பளவு ஒதுக்கப்பட்டு உள்ளது. சரக்கு தளம் 7-ல் சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பளவும், சரக்கு தளம்-10 அருகில் மேலும் 20,000 சதுர மீட்டர் பரப்பளவும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நேரடி சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்து சேவைகள் மூலம் துறைமுகத்துக்கு வரும் சரக்கு பெட்டக சரக்குகளை சேமித்து வைப்பதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் கூடுதல் இடம் பயன்படுத்தப்பட உள்ளது. இங்கு சரக்கு பெட்டகங்கள் இலவசமாக சேமிக்கப்பட்டு 10 நாட்களுக்கு பின்னரே வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் நடைமுறையில் உள்ள கட்டண விகித அட்டவணையின்படி சேமிப்புக் கட்டணங்கள் விதிக்கப்படும்.
இந்த இலவச சேமிப்பு வசதி நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து இயக்குனர்கள், முனைய இயக்குனர்கள், பெருந்தொழில் நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர்கள், சுங்க தரகர்கள், கப்பல் இயக்காமல் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கும் வழங்கப்படும்.
இந்த வசதி, துறைமுகத்தின் நடைமுறையில் உள்ள விதிமுறைகள், இடவசதி மற்றும் செயல்பாட்டு வசதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து சேவைக்கு மட்டும் பொருந்தும். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதுடன், 31.03.2027 வரை நடைமுறையில் இருக்கும்.
இவ்வறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.