கோப்பு படம் 
தமிழக செய்திகள்

திருப்பதியில் இருந்து நாகர்கோவில் வந்த ஆம்னி பஸ்சில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பதியிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த ஆம்னி பஸ்சில் 10 கிலோ கஞ்சாவை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கான பறக்கும்படையினர் போளூர் பைபாஸ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது திருப்பதியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ் வந்தது. அந்த பஸ்சை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்தி அதிரடியாக சோதனையிட்டனர்.

பஸ்சின் பக்கவாட்டில் பயணிகளின் உடைமைகள் வைக்கும் இடத்தை அவர்கள் திறந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் பஸ்சுக்குள் சென்றும் சோதனை செய்தனர். அப்போது இருக்கைக்கு அருகே பை ஒன்று இருந்தது. அதில் 10 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பஸ்சில் வந்த பயணிகளிடம் விசாரித்தபோது யாரும் அதற்கு உரிமை கோரவில்லை. இதையடுத்து திருப்பதியில் முன்பதிவு செய்த அனைத்து பயணிகளின் விவரத்தை பறக்கும்படையினர், போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை நடந்த நிகழ்வு வீடியோ பதிவு செய்யப்பட்டது. அதனை வைத்தும் சந்தேகத்திற்குரியவர்கள் உள்ளனரா என ஆய்வு செய்து வருகின்றனர்.