கோவை,
10 மாத பெண் குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசிதான் காரணம் என பெற்றோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அந்தோணி - சரண்யா. இந்த தம்பதி கோவையில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கனிஷ்கா ஸ்ரீ என்ற 10 மாத பெண் குழந்தை இருந்தது. தம்பதி தங்கள் குழந்தை கனிஷ்கா ஸ்ரீக்கு கடந்த 7-ந்தேதி கோவையில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து மறுநாள் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர், 9-ந்தேதி வீட்டில் இருந்த குழந்தை கனிஷ்கா ஸ்ரீ மயக்கமடைந்துள்ளது.
இதனால் பதறிய பெற்றோர் குழந்தையை வெள்ளலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குழந்தை கனிஷ்காவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கனிஷ்கா ஸ்ரீ இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மருத்துவமனையில் குழந்தை கனிஷ்கா ஸ்ரீ உயிரிழந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியதே தங்கள் குழந்தையின் இறப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதேவேளை, தடுப்பூசிக்கும் குழந்தை இறப்புக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைக்கு ஏற்கனவே உடல்நல பிரச்சினை இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.