தமிழக செய்திகள்

17-ல் 10 உங்களுக்கு.. 7 எங்களுக்கு..: காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. வைத்த புதிய 'செக்'!

கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.களின் கடந்த 5 ஆண்டு செயல்பாடு எப்படி? என்பது குறித்து தொகுதி மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயை திமுக கையில் வைத்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியான தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியை உறுதி செய்துள்ளது. 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல், 5-வது முறையாக இந்தக் கூட்டணி தொடர்கிறது.

கடந்த (2021) சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், அதில் 18-ல் வெற்றி பெற்றது. பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சட்டசபையில் 3-வது பெரிய கட்சி

துரதிர்ஷ்ட வசமாக அவரும் இறந்துபோக, அந்தத் தொகுதியை தி.மு.க.வுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது. இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். தற்போதைய நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பிறகு சட்டசபையில் 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

இந்த நிலையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கியுள்ளது. தற்போது, எந்தெந்த தொகுதிகள் என்று அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

அதிர்ச்சி வைத்தியம்

காங்கிரஸ் கட்சியோ, ஏற்கனவே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ள 17 தொகுதிகளை அப்படியே மீண்டும் திருப்பித்தர தி.மு.க.விடம் கோரிக்கை வைத்ததுடன், மீதமுள்ள 11 தொகுதிகளுக்கு புதிய பட்டியலையும் வழங்கியுள்ளது.

ஆனால், தி.மு.க.வோ, காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில், 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில், 7 பேரின் செயல்பாடு சரியில்லை என்று கூறி, இந்தமுறை அந்தத் தொகுதிகளை தாங்கள் எடுத்துக்கொள்வதாக கூறிவிட்டதாம்.

7 எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடு சரியில்லை

இந்த முறை தி.மு.க. தலைமை, தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.களின் கடந்த 5 ஆண்டு செயல்பாடு எப்படி? என்பது குறித்து தொகுதி மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயை கையில் வைத்துள்ளதாம்.

அந்த வகையில், ஊட்டி, விருத்தாசலம், அறந்தாங்கி, நாங்குநேரி, சிவகாசி, தென்காசி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 7 தொகுதிகளில் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு சரியில்லையாம்.

Also read:நாளை அறிவிக்கப்படுகிறதா தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி?

காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி

எனவே, "இந்த 7 தொகுதிகளை எங்களிடமே கொடுத்துவிடுங்கள். நாங்கள் வேட்பாளர்களை களம் இறக்கிக்கொள்கிறோம்" என்று தி.மு.க. கறாராக கூறிவிட்டதாம். இதனால், தமிழக மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

"என்னடா இது.. கூட்டணி உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பு நாம்தான், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் ஒதுக்கீடு என்று தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்தோம். ஆனால், கூட்டணி எல்லாம் முடிந்து, இன்றைக்கு தொகுதிகளை அடையாளம் காணும்போது, அந்த நெருக்கடி நமக்கே மீண்டும் திரும்பி வருகிறதே" என்று காங்கிரஸ் கட்சியினர் முனுமுனுக்க தொடங்கி இருக்கிறார்களாம்.

கிரீஷ் சோடங்கர் திணறல்

இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியில் மற்றொரு புறம் கோஷ்டி தலைவர்கள் எல்லாம் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு "சீட்" கேட்டு வருகிறார்களாம். தி.மு.க.வின் கறார் நடவடிக்கையால், தொகுதிகளே இன்னும் முடிவாகாதபோது எப்படி "சீட்" கொடுக்க முடியும் என்று காங்கிரஸ் தலைமையும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறதாம்.

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கருக்கு, டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து, கோஷ்டி தலைவர்களின் பரிந்துரைகளையும் பரிசீலியுங்கள் என்று தகவல் வந்துள்ளதாம். ஆனால், தொகுதி நிலவரம் குறித்த தகவல்கள் அனைத்தும் தி.மு.க.வின் கையில் இருப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் அவரும் திணறிவருகிறாராம்.

மிகப்பெரிய பின்னடைவு

காங்கிரஸ் வசம் உள்ள 17 தொகுதிகளில், 7 தொகுதிகள் தி.மு.க. கைக்கு மாறுவது உறுதியானால், அது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படும்.