சென்னை,
சமீபகாலமாக சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை - அரக்கோணம் மற்றும் சென்னை - கும்மிடிப்பூண்டி ஆகிய புறநகர் ரெயில் பாதைகளிலும், வந்தே பாரத் போன்ற அதிவேக ரெயில்கள் மீதும் கல் வீசும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலும் தண்டவாளத்தின் ஓரம் விளையாடும் சிறுவர்கள் அல்லது போதை ஆசாமிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகளைச் சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், உள்ளே இருக்கும் பயணிகளுக்கும் கடுமையான ரத்தக் காயங்களையும், சில நேரங்களில் கண் பார்வை பறிபோகும் நிலையும் ஏற்படுகிறது. கல் வீச்சு சம்பவங்கள் ரெயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. ரெயில்வே பாதுகாப்புப் படையின் தரவுகளின்படி, கல் வீச்சு சம்பவங்கள் பெரும்பாலும் மாலை நேரங்களிலும், மக்கள் நடமாட்டம் குறைவான தண்டவாளப் பகுதிகளிலும் அதிகம் நடக்கின்றன. இரவு நேரத்திலும் ரெயில்கள் சென்று கொண்டிருக்கும் போது கல் வீசப்படுகிறது. இது பயணிகளிடையே ஒருவித பயண பயத்தை உருவாக்குகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஜன்னல் ஓரம் அமரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
வந்தே பாரத் போன்ற ரெயில்களின் கண்ணாடிகள் விலை உயர்ந்தவை என்பதால், இத்தகைய செயல்களால் ரெயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ரெயில்வே சட்டம், 1989-ன் பிரிவு 150 (Section 150) என்பது ரெயிலைத் கவிழ்க்க முயற்சிப்பது அல்லது பயணிகளுக்குத் தீங்கு விளைவிப்பவர்களுக்கு எதிரான மிகக் கடுமையான சட்டமாகும்.
யாராவது ஒரு நபர் ரெயிலின் மீது கல் வீசி, அதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தே செய்தால், அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். ஒருவேளை அந்த கல் வீச்சால் உயிரிழப்பு ஏற்பட்டால், அது மரண தண்டனை வரை கூட விதிக்க வாய்ப்புள்ளது. சென்னை ரெயில்வே கோட்டம் தற்போது ரெயில் தண்டவாள ஓரங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது, ட்ரோன் மூலம் கண்காணிப்பது மற்றும் கல் வீச்சு எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்களைத் தண்டவாள ஓரம் உள்ள பள்ளிகளில் நடத்துவது எனப் பல முனைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், ரெயிலின் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது கடுமையான குற்றம் என்றும், சென்னை கோட்டத்திற்கு உட்பட்டரெயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.