தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

கல்வியறிவில் சிறந்த கன்னியாகுமரி மாவட்டம், வாக்குப்பதிவிலும் முதன்மை மாவட்டமாகத் திகழ பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் அழகுமீனா கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் "தேர்தல் திருவிழா" பிரச்சார வாகனத்தை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அழகுமீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய கலெக்டர், "கல்வியறிவில் சிறந்த கன்னியாகுமரி மாவட்டம், வாக்குப்பதிவிலும் முதன்மை மாவட்டமாகத் திகழ பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடந்த தேர்தலில் பதிவான 65 சதவீத வாக்குப்பதிவை உயர்த்தி, வரவிருக்கும் ஏப்ரல் 23 தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டுவதே நோக்கம்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இந்த மின்னணு வாகனம் மாவட்டத்தின் 6 தொகுதிகளுக்கும் சென்று, புதிய வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் கட்டாயம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்" என்று தெரிவித்ததோடு, அந்த வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்ற தகவல் உள்ளிட்ட விழிப்புணவர்வு வாசகங்கள் அந்த வாகனத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT