தூத்துக்குடி,
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வேப்பலோடை பகுதியில் உள்ள சகாயமாதா உப்பு நிறுவனத்தில் நேற்று உப்பளத் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஷு மகாஜன் நேரில் கலந்துகொண்டு உப்பளத் தொழிலாளர்களிடம் உரையாற்றினார். அப்போது, ஜனநாயகக் கடமையான வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கிய அவர், விளாத்திக்குளம் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து தொழிலாளர்களுடன் இணைந்து கலெக்டர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார். தேர்தல் நாளில் எவ்விதத் தூண்டுதலுக்கும் இடமளிக்காமல், நேர்மையாகவும், சுயமாகவும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.