தலைமை ஆசிரியரின் வீடு 
தமிழக செய்திகள்

எட்டயபுரத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

கொள்ளையடிக்கப்பட்ட பைக் மட்டும் பிதப்புரம் பகுதி சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேல ரத வீதியில், பூட்டியிருந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 100 பவுன் தங்க நகைகள் மற்றும் பைக்கை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வெளியூர் சென்ற குடும்பம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் முத்துமாரி (வயது 50). இவரது மனைவி தேன்மொழி (வயது 46). இந்த தம்பதியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 5-ந்தேதியன்று குடும்பத்துடன், ராமநாதபுரத்திலுள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

100 பவுன் நகை கொள்ளை

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்கப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

போலீசில் புகார்

முத்துமாரி குடும்பத்தினர் நேற்று (திங்கட்கிழமை) வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக எட்டயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையோரத்தில் மீட்கப்பட்ட பைக்

இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட பைக் மட்டும் பிதப்புரம் பகுதி சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT