சென்னை,
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை உடனே அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அவசர மருத்துவ சேவை வழங்குவதற்கான 108 அவசர ஊர்திச் சேவைத் (ஆம்புலன்ஸ் சேவை) திட்டத்தில் பணியாற்றி வரும் 7500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம், ஊதிய உயர்வு ஆகியவையும், பணிப்பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். கால நேரம் பார்க்காமல் மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 அவசர சேவை பணியாளர்களுக்கு வாழ்வாதார உத்தரவாதம் கூட வழங்கப்படாதது கவலையளிக்கிறது.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் அரசின் நிதி ஒதுக்கீட்டில் தனியார் மூலம் 108 அவசர சேவை வழங்கப்படும் நிலையில், தினமும் 12 மணி நேரம் அல்லது அதற்கும் கூடுதலாக பணி செய்ய வேண்டியுள்ளது; மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண் தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை; உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு விடுப்பில் செல்லும் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்; உடல் நலம் தேறி அவர்கள் மீண்டு வந்தாலும் பணி வழங்கப்படுவதில்லை; பல ஆண்டுகளாக ஈட்டிய விடுப்புக்கான பணப்பலன் வழங்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டும் பணியாளர்கள், இந்தக் குறைகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடகம், ஹரியானா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 108 அவசர ஊர்தி சேவையை மாநில அரசின் சுகாதார சேவைகள் துறைகளே கவனித்துக் கொள்கின்றன. அங்கு பணியாற்றும் 108 சேவை ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியமும், பிற உரிமைகளும் வழங்கப்படுகின்றன. 108 சேவையை அரசே வழங்கும் போது அதன் பணியாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் போது, அந்த முறையை தமிழ்நாட்டில் கடைபிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
இந்தியாவில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் 32 ஆண்டுகளுக்கு முன்பாக 1994-ம் ஆண்டிலேயே தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தொடங்கப்பட்டது. அந்த கழகத்தின் வாயிலாகவே 108 அவசர ஊர்தி சேவைகளை மிகவும் சிறப்பாக வழங்க முடியும். அதன் மூலம் தொழிலாளர்களுக்கும் நியாயமான ஊதியம் மற்றும் உரிமைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
எனவே, தமிழ்நாட்டில் உயிர்காக்கும் 108 அவசர ஊர்தி சேவையை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் வாயிலாக அரசே ஏற்று நடத்த வேண்டும். 108 அவசர ஊர்திச் சேவைத் திட்டத்தில் பணியாற்றி வரும் 7500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பதுடன், அவர்களின் பிற நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.