திருவேற்காடு,
சென்னை திருவேற்காடு பகுதியில் சகோதரியைவிட குறைந்த மதிப்பெண் பெற்றதால் விரக்தி அடைந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தனியார் நிறுவனத்தில் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகள்களான பிரியங்கா (வயது 15), பிரியதர்ஷினி(15) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவர்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது பிரியங்கா, உடை மாற்றுவதற்காக அறைக்குள் சென்றவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த திருவேற்காடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இரட்டை சகோதரிகளான பிரியங்காவும், பிரியதர்ஷினியும் தேர்வுகளில் மதிப்பெண் பெறுவதில் வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. பிரியதர்ஷினி அதிக மதிப்பெண்கள் பெற்ற நிலையில், பிரியங்கா குறைவான மதிப்பெண்கள் பெற்றதாகவும், இதனால் அதிக மதிப்பெண்கள் பெறுமாறு பெற்றோர் அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த பிரியங்கா, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.