தமிழக செய்திகள்

சிவகங்கையில் மது குடிக்க வைத்து 10-ம் வகுப்பு மாணவர் கழுத்து அறுத்து கொலை: போலீசார் விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர், 3 நபர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு கண்மாய்க்கு சென்றதாக கூறப்படுகிறது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் அஸ்வின் (வயது 15). இவர் அருகில் உள்ள திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் காலை அஸ்வின் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் பள்ளிக்கு செல்லாமல் இளந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அரவிந்த்(25), காரையூரை சேர்ந்த கணேசன்(22) மற்றும் அப்பகுதியை சேர்ந்த அஜய் ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு கண்மாய்க்கு சென்றதாக கூறப்படுகிறது.

மாணவர் கழுத்து அறுத்து கொலை:

பின்னர் அவர்கள் 4 பேரும் கண்மாய் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அரவிந்த்துக்கும், மாணவர் அஸ்வினுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அவர்களை அஜய் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் கேட்காததால் அஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மாணவர் அஸ்வின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அரவிந்த், கணேசன் ஆகியோர் அங்கிருந்து மாயமாகி இருந்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த், கணேசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

நண்பர்களுக்கு வலைவீச்சு:

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "மது குடிக்க வைத்து அஸ்வின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். தப்பி ஓடிய அரவிந்த், கணேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறோம். அவர்கள் சிக்கினால்தான் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும்" என்றனர்.