ராமேசுவரம்,
படகு என்ஜின் பழுதாகி இலங்கையில் கரை ஒதுங்கிய நிலையில், எல்லை தாண்டியதாக கைதான ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை அபராதத்துடன் அந்நாட்டு கோர்ட்டு விடுவித்தது.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 6-ந்தேதி விசைப்படகு ஒன்றில் 11 மீனவர்கள் மீன்பிடிக்க சென்று இருந்தனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது இந்த மீனவர்களின் படகானது என்ஜின் பழுதாகி கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகத்தால் இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியது.
இந்த படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதில் இருந்த 11 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். தொடர்ந்து இலங்கை ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த 11 பேரும் நேற்று வழக்கு விசாரணைக்காக இலங்கை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 11 பேருக்கும் இலங்கை பணம் தலா ரூ.50 ஆயிரம் (இந்திய மதிப்பில் தலா ரூ.14 ஆயிரம்) அபராதம் விதித்து விடுவிப்பதாகவும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் படகின் மீதான விசாரணை வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி அன்று நடைபெறும் என்றும், அப்போது படகின் உரிமையாளர் படகிற்கான அனைத்து ஆவணங்களுடன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.