தமிழக செய்திகள்

கோவில்பட்டியில் லோடு வேனில் 1.1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க பறக்கும் படையினரும், போலீசாரும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஜயாபுரி கிராமத்தின் நடுத்தெருப் பகுதியில் சாலையோரம் ஒரு லோடு வேன் நீண்ட நேரமாகக் கேட்பாரற்று நின்றதைக் கண்டு போலீசார் சந்தேகமடைந்தனர்.

அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 23 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அவற்றில் மொத்தம் 1,150 கிலோ (1.1 டன்) ரேஷன் அரிசி கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீசார், கூடுதல் விசாரணைக்காக தூத்துக்குடி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டதா? போலீசார் வருவதைக் கண்டு ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டாரா? என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.