அதிமுக 
தமிழக செய்திகள்

ரூ.112 கோடியே 39 லட்சம் தேர்தல் செலவு - அதிமுக

தேர்தல் நிறைவில் கட்சியின் மொத்த கையிருப்பு 295 கோடியே 98 லட்சத்து 55 ஆயிரத்து 517 ரூபாய் எனவும் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்தது அதிமுக.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணைய செயலாளருக்கு அனுப்பியுள்ள அறிக்கையின்படி, தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சிப் பணிகளுக்காக தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.109,61,81,982 செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவை, கேரள ஆகிய மாநிலங்களுக்கான மொத்த தேர்தல் செலவு 112 கோடியே 39 லட்சத்து 88 ஆயிரத்து 992 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நிறைவில் கட்சியின் மொத்த கையிருப்பு 295 கோடியே 98 லட்சத்து 55 ஆயிரத்து 517 ரூபாய் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம், ஊடகங்களுக்கே பெரும்பகுதி செலவு

அதிமுகவின் தேர்தல் செலவில் பெரும்பகுதி விளம்பரம் மற்றும் ஊடகங்களுக்கே சென்றிருக்கிறது. நாளிதழ்கள், தொலைக்காட்சி, சமூக வலைதள விளம்பரங்கள் உள்ளிட்ட பிரச்சாரப் பணிகளுக்காக மட்டும் சுமார் ரூ.103.98 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்காக ரூ.1.28 கோடி செலவாகியிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்களுக்காக ரூ.17.37 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் பிரசாரச் செலவு

இதில் கவனம் ஈர்க்கும் மற்றொரு விஷயம் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரச் செலவு. அவரது பிரச்சாரப் பயணத்துக்காக ரூ.1.75 லட்சமும், வாகன டீசல் செலவுக்காக ரூ.4.14 லட்சமும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கைகள், ஃபார்ம்-ஏ, ஃபார்ம்-பி உள்ளிட்ட படிவங்களைத் தயாரித்து அச்சிடுவதற்காக ரூ.4.11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் களத்தில் தமிழகத்தில் ரூ.109 கோடிக்கு மேல் செலவு செய்திருந்தாலும், தேர்தல் செலவுகள் அனைத்தும் போக அதிமுகவிடம் ரூ.296 கோடி நிதி கையிருப்பில் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT