விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நள்ளிரவில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில், புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,168 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் எல்லைப் பகுதியில் சட்டவிரோத மது கடத்தலைத் தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, நேற்று (புதன்கிழமை) நள்ளிரவில் அந்த வழியாக வந்த சந்தேகத்திற்குரிய பிக் அப் வாகனம் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
போலீசாரின் சோதனையில் சிக்காமல் இருப்பதற்காக, மதுபாட்டில்களைப் பெரிய அளவிலான கிப்ட் பார்சல்கள் போல பேக்கிங் செய்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பார்சல்களைப் பிரித்துப் பார்த்தபோது, அவற்றிற்குள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 1,168 மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த மதுபாட்டில்களின் சந்தை மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடத்தப்பட்ட 1,168 மதுபாட்டில்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பிக் அப் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சட்டவிரோத மது கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் உடனடியாக கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.