தமிழக செய்திகள்

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய 117 கிலோ ‘புள்ளி களவாய் மீன்'

அதிக எடையில் புள்ளி களவாய் மீன் கிடைப்பது அரிதாகும்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் நேற்று முன்தினம் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 100 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று பலவகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.

இதில் ஒரு விசைப்படகு மீனவர்கள் வலையில் 117 கிலோ எடையும், 6 அடி நீளமும் கொண்ட புள்ளி களவாய் மீன் சிக்கியது. இந்த மீனை 5 மீனவர்கள் சேர்ந்து படகில் இருந்து இறக்கி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இந்த களவாய் மீனை வியாபாரி ஒருவர் ரூ.23 ஆயிரத்துக்கு வாங்கினார்.

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, "இதுபோன்று அதிக எடையில் புள்ளி களவாய் மீன் கிடைப்பது அரிதாகும். கடந்த 4 ஆண்டுகளில் 100 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட புள்ளி களவாய் மீன் கிடைத்தது இதுவே முதல்முறை” என்றனர்.