சென்னை,
தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்படும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் துறைவாரியாக முக்கிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:-
'உங்களில் ஒருவன் நான்' என உரக்கச் சொல்லி, மக்களோடு மக்களாகப் பயணித்து, மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி இந்தியாவின் நம்பர் ஒன் முதல்-அமைச்சராகத் திகழ்கிறார் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்றைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் பொருளாதாரமாக, 11.19% வளர்ச்சியுடன் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் காரணம். அ.தி.மு.க ஆட்சியில் 4 சிப்காட் பூங்காக்கள் மட்டுமே தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் 33 சிப்காட் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 8 டைடல் பார்க் & டைடல் நியோ பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. 8 இடங்களில் பணிகள் நடக்கின்றன. 4 இடங்களில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன. எப்போதும் டெல்லிக்கு 'அவுட் ஆப் கண்ட்ரோலாக' இருக்கும் தமிழ்நாடு, பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்து நிற்கிறது.
2021-2026 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் மொத்தம் 1,190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 36.06 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய சாதனை. 5 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41% பங்களிப்புடன் இந்தியாவின் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அதேபோல் 42% வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியிலும் நாம்தான் முன்னிலையில் இருக்கிறோம். அதோடு 70% மின்சார இருசக்கர வாகனங்களும், 40% மின்சார கார்களும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.