தமிழக செய்திகள்

கோழியை விழுங்கி நகர முடியாமல் தவித்த 12 அடி மலைப்பாம்பு..! விவசாயிகள் அதிர்ச்சி

சுமார் ஒரு மணி நேரம் போராடி வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

மலைப்பாம்பு

குடியாத்தம் ஒன்றியம் பரதராமியை அடுத்த வி.ராமாபுரம் கிராமத்தில் கங்காதரனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பசு மாடுகளுக்கு திணை பயிரை அறுவடை செய்து கொண்டிருந்தவர்கள் மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி கொண்டு நகர முடியாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நிலத்தில் இருந்து வெளியேறினர்.

வனத்துறையினர்

இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் மாணவர்கள் குமரேசன், ராதாகிருஷ்ணன், சதீஷ்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து, மலைப்பாம்பை பிடித்தால் விழுங்கிய கோழியை கக்கி விட்டு ஆக்ரோஷமாக மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் என்பதால் வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்.

காட்டில் விட்டனர்

பின்னர் அங்கிருந்து மலைப்பாம்பு சிறிது தூரம் சென்றதும், அதை ஒரு மணி நேரமாக போராடி வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர் அருகில் உள்ள அனுப்புக்காட்டில் விட்டனர்.

SCROLL FOR NEXT