தமிழக செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலி : பிரதமர் நரேந்திர மோடி - ராகுல்காந்தி இரங்கல்

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி , ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு செந்தமான பட்டாசு தொழிற்சாலை அச்சங்குளத்தில் உள்ளது.நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பெருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இன்று வழக்கம்போல் ஆலையில் பட்டாசு உற்பத்தி மேற்கெள்ளப்பட்டது. அப்போது, ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதனால் அடுத்தடுத்து உள்ள 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.

இதில், ஏழையிரம்பண்ணையைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் உள்பட 11 தெழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மாரியம்மாள் தவிர மற்ற 10 பேரும் யார் என்பதும் அவர்களது பெயர், விவரம் குறித்து உடனடியாக கண்டறிய முடியவில்லை.உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை போலீஸார் மற்றும் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயம்பட்ட நபர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர்பலி ஏற்பட்டடிருப்பதை அறிந்து வேதனை அடைந்தேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் நிதி உதவி.சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்பு, நிவாரண உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT