தமிழக செய்திகள்

ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பார்த்த 1.20 கோடி பேர்..! வெளியான பரபரப்பு தகவல்

ஜனநாயகன் பட விவகாரத்தில் கைதானவர்களில் 2 பேர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் இந்த படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

'ஜனநாயகன்' திரைப்படம் ஆரம்பத்தில் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து, விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் திட்டமிட்ட தேதிகளில் படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

இந்தசூழலில் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தமிழில் 'ஏ' சான்றிதழ் கிடைக்கப்பெற்றதாகவும், இப்படத்தை இந்த மாதம் 16 அல்லது 23 ஆகிய தேதிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. பிற மொழிகளுக்கான தணிக்கை நடைமுறைகள் முடிய சுமார் ஒரு வாரம் ஆகலாம் என்றும், அதன் பின்னரே படத்தின் இறுதி வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை ஒரு கோடியே இருபது லட்சம் பேர் பார்த்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக சட்டவிரோதமாக இணையத்தில் ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்டது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரில், சென்னை சைபர் கிரைம் போலீஸார், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரஜினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை ஒரு கோடியே இருபது லட்சம் பேர் பார்த்துள்ளதாகவும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்று கொண்ட நீதிபதி, இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.