தென்காசி,
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (40). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள அரசு கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை ராமசுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் மாடி வழியாக உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க கம்மல், மோதிரம், வளையல் உள்ளிட்ட சுமார் 12 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
இரவில் வீட்டிற்கு திரும்பிய ராமசுப்பிரமணியன், வீட்டுக்குள் பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நகைகள் காணாமல் போனதை அறிந்து வீடு முழுவதும் தேடியும் கிடைக்காததால், உடனடியாக ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.