தமிழக செய்திகள்

வி.ஏ.ஓ. வீட்டில் 12 சவரன் நகை திருட்டு: பெங்களூருவில் தந்தை, மகன் கைது

தூத்துக்குடியில் ஒரு வி.ஏ.ஓ. அவரது மனைவியோடு வெளியூருக்குச் சென்று, வீடு திரும்பியபோது, வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை, சந்தோஷ்நகரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 44), ஓட்டப்பிடாரம்- தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுசல்யா(37), திருநெல்வேலியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

இவர்கள் கடந்த 14-ம் தேதி வெளியூருக்குச் சென்றுவிட்டு, 16-ம் தேதி வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் துப்பு துலக்கினர்.

விசாரணையில், கர்நாடக மாநிலம் உத்தரகள்ளியைச் சேர்ந்த அர்ஜூன்(56) மற்றும் அவரது மகன் மோகன்குமார்(22) ஆகிய 2 பேர் வியாபாரிகள் போல் நோட்டமிட்டு இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களது செல்போன் எண்களை சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்ததில், 2 பேரும் பெங்களூருவில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, புதுக்கோட்டை போலீசார் பெங்களூரு விரைந்து சென்று தந்தை, மகன் 2 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT