தமிழக செய்திகள்

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பங்கள் கண்டெடுப்பு

பல்லவர் காலத்தை சேர்ந்த 1,200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம்,

விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், மரக்காணம் அருகே உள்ள குரும்பரம், செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூர் பகுதிகளில் களஆய்வில் ஈடுபட்டார். அப்போது பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து அவர் கூறியதாவது:-

குரும்பரம் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விளைநிலத்தில் பலகைக்கல்லால் ஆன கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. 8 கரங்களுடன் எருமை தலை மீது நின்றிருக்கிறார். அழகான முக அமைப்பு, ஆடை அணிகலன்களுடன் கொற்றவை காட்சி தருகிறார். முன் வலது கரம் அபய முத்திரையுடனும், இடதுகரம் தொடை மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. சிற்பத்தின் இடதுபக்கம் கொற்றவையின் வாகனமான மான் நிற்கிறது.

செஞ்சி அருகே மேல்சித்தாமூர் கிராமத்தில் சமண கோவில்கள், சமணர் மடம் அமைந்துள்ளன. இங்குள்ள ஏரிக்கரை மற்றும் சுடுகாட்டிற்கு மத்தியில் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. முன் 2 கரங்களும் தொடை மீது வைத்த நிலையிலும், பின் வலக்கரங்களில் நீண்ட சூலாயுதம், பிரயோக சக்கரம் காணப்படுவதும் சிறப்பிற்கு உரியதாகும். சிற்பத்தின் மேல் இடது மூலையில் சிறிய மான் இடம்பெற்றுள்ளது. இடதுகால் நேராக நிற்க வலது காலை சற்று மடக்கியும், மெலிந்த இடையுடனும் கொற்றவை நளினமாக நிற்கிறார்.

Also read:நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே விரும்புகிறார்கள் - டாப்சி

இந்த 2 சிற்பங்களும் பல்லவர் காலத்தை (கி.பி. 8-ம் நூற்றாண்டு) சேர்ந்தவை ஆகும். 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே பல இடங்களில் கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொற்றவை வழிபாடு இந்த மாவட்டத்தில் சிறப்பாக இருந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் தொடர்கிறது என்பதற்கு குரும்பரம், மேல்சித்தாமூர் சிற்பங்கள் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.