தமிழக செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு நீர்திறப்பு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களாக அதே அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் தண்ணீரின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில் நீர்திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்டா பாசனத்துக்கான நீர்த்தேவை மேலும் அதிகரித்துள்ளதால், இன்று காலை 6 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.39 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 709 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு சுமார் 55.35 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளுக்கு தேவையான நீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT