திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 125 பேர் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவின்பேரில், குற்றவாளிகள் மீது தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று ஒரே நாளில் 3 குற்றவாளிகள் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் கார்த்திக் (வயது 30) மற்றும் தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த ஆனந்தமுருகன் மகன் தங்கராஜ்(24) ஆகிய 2 பேர் மீது கஞ்சா தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தனர். மேற்சொன்ன 2 பேர் மீதும், நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் பரிந்துரையின் பேரிலும், மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரையின் அடிப்படையிலும், மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் மாரியப்பன்(21) என்பவர் மீது, சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி பரிந்துரையின் பேரிலும், மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் அடிப்படையிலும், மாவட்ட கலெக்டர் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து மேற்சொன்ன கார்த்திக், தங்கராஜ் மற்றும் மாரியப்பன் ஆகிய 3 பேரும் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 125 பேர் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.