தமிழக செய்திகள்

தமிழகத்தில் சைபர் மோசடி கும்பலுக்கு பணம் எடுத்து கொடுத்த மேலும் 128 பேர் அதிரடி கைது

சென்னை 'சைபர் கிரைம்' போலீசார் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில் நேற்று முன்தினம் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ஆன்லைன் வழியில் கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்படும் மோசடிகள் தொடர்கதையாகியுள்ளன.

கைது

'சைபர்' மோசடி செயல்களில் அபகரிக்கப்படும் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் அனுப்பப்பட்டு எடுக்கப்படுகிறது. இந்த பணத்தை எடுத்து கொடுப்பதற்காக கமிஷன் தொகை வழங்கப்படுகிறது.

இந்த கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலர் மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்து வருவதை சென்னை 'சைபர் கிரைம்' போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில் நேற்று முன்தினம் 77 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், மேலும் 128 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சைபர் கிரைம் போலீசார்

அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை. நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, திருச்சி, விருதுநகர் மற்றும் சென்னையைச் சேர்ந்த மொத்தம் 205 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒருவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பும் பணத்தை கமிஷனுக்காக எடுத்து கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.