தமிழக செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 128-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது

மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, வனப்பகுதியின் இயற்கை அழகு மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள். வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு தேர்தல் காரணமாக ஊட்டியில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, குன்னூரில் பழ கண்காட்சி மட்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 14-ந் தேதி ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி 2 லட்சம் ரோஜா மலர்களால் பறவைகள் வடிவ அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 128-வது மலர் கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. மலர் கண்காட்சியை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தொடங்கி வைக்கிறார்.

இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள், சுற்றுலா பய ணிகளை கவரும் வகையில் ஜெர்மனியம், சைக்ளோபின், பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் உள்பட 275 வகையான விதைகள், செடிகள் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டு, மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

இதேபோல் மலர் மாடம் உள்பட பல இடங்களில் 50 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த செடி களில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகிறது. கண்காட்சியில் தமிழத்தின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் போல 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்னேசன் உள்பட பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் ஊட்டி மலை ரெயில் என்ஜின், மாமல்லபுரம் கோவில், திருவாரூர் தேர் உள்பட 26 மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களை விளக்கும் மலர் அலங்காரங்கள் உள்பட பல்வேறு அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளது. 7 லட்சத்திற்கும் அதிகமான மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கள்ளிச்செடி மாளிகை, கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு அங்கு அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி, இந்த முறை 11 நாட்கள் நடப் பதால் பூந்தொட்டிகள் மற்றும் மலர் செடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத் துவதற்காக அரங்கம், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக சுற்று பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.