திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 4-ந் தேதி முதல் ஆடி கிருத்திகை திருவிழா தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்ய உள்ளனர்.
இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை). 4-ந்தேதி ஆடி அஸ்வினி, 5-ந்தேதி ஆடி பரணி, 6-ந்தேதிஆடி கிருத்திகை, 7-ந்தேதி 2-ம் தெப்பல், 8-ந்தேதி 3-ம் தெப்பல், 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), 14-ந்தேதி ஆடிப்பூரம், 15-ந்தேதி சுதந்திர தினம், 16, 23, 30-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகள் ஆகிய 13 நாட்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவார்கள்.
இதனால் இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இட வசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும்.
மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்படும். இதர பஸ்கள் கோவில் வாகன நிறுத்தும் இடங்களில் இலவசமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.