தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் காரில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரையன்ட் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தலைமையிலான போலீசார் பிரையன்ட் நகர் முதல் தெருவில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சாலையோரமாக சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனையிட்டனர்.
விசாரணையில், காரில் இருந்தவர் தூத்துக்குடி மேல சண்முகபுரம் வண்ணார் 3-வது தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகன் தருண்குமார் (21) என்பது தெரியவந்தது. தொடர்ந்து காரை சோதனையிட்டபோது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தருண்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அவருக்கு வழங்கிய மொத்த வியாபாரி யார், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.