தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் நீண்ட காலமாக பூட்டிக் கிடந்த குடோனில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் மேற்பார்வையில், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் மற்றும் போலீசார் இந்திரா நகர் பகுதியில் உள்ள குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஏராளமான மூட்டைகளில் மொத்தம் 1,300 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து குடோனில் இருந்த புகையிலை மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வியாபாரி சக்திவேல் (50) என்பவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது உறவினரான வைரமுத்து (41) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.